காங்கிரசின் தேர்தல் சுற்றுப்பயணம் இன்று தொடங்குகிறது பரமேஸ்வர் அறிவிப்பு


காங்கிரசின் தேர்தல் சுற்றுப்பயணம் இன்று தொடங்குகிறது பரமேஸ்வர் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 Dec 2017 3:00 AM IST (Updated: 21 Dec 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரசின் தேர்தல் சுற்றுப்பயணம் இன்று(வியாழக்கிழமை) தொடங்குவதாக மாநில தலைவர் பரமேஸ்வர் அறிவித்து உள்ளார்.

பெங்களூரு,

காங்கிரசின் தேர்தல் சுற்றுப்பயணம் இன்று(வியாழக்கிழமை) தொடங்குவதாக மாநில தலைவர் பரமேஸ்வர் அறிவித்து உள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–

தேர்தல் சுற்றுப்பயணம்

கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்குவதால் நாங்கள் பிரசார பணிகளை விரைவுபடுத்தி வருகிறோம். முதல்–மந்திரி சித்தராமையா ஏற்கனவே சுற்றுப்பயணத்தை தொடங்கி சாதனை விளக்க பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறார். 100 தொகுதிகளில் காங்கிரசின் தேர்தல் சுற்றுப்பயணம் நாளை(அதாவது இன்று) தொடங்குகிறது. கோலார் மாவட்டம் முல்பாகலில் இருந்து இந்த சுற்றுப்பயணத்தை நாங்கள் தொடங்குகிறோம்.

அதைத்தொடர்ந்து பகல் 2 மணிக்கு கோலார் தங்கவயலில் கூட்டம் நடைபெறும். நாளை(வெள்ளிக்கிழமை) கோலார், மாலூரில் பொதுக்கூட்டம் நடக்கும். எனது தலைமையில் நடைபெறும் இந்த சுற்றுப்பயணத்தில் மேலிட பொறுப்பாளர் வேணுகோபால், மூத்த தலைவர்கள் ஆஸ்கர் பெர்னாண்டஸ், மல்லிகார்ஜுன கார்கே, வீரப்பமொய்லி, பிரசார குழு தலைவர் டி.கே.சிவக்குமார், மாநில செயல் தலைவர்கள் தினேஷ் குண்டுராவ், எஸ்.ஆர்.பட்டீல் மற்றும் அந்தந்த மாவட்ட பொறுப்பு மந்திரிகள் கலந்து கொள்கிறார்கள்.

நடப்பு அரசியல் நிலவரங்கள்

இந்த சுற்றுப்பயணத்தில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கட்சியின் கொள்கைகள், மாநில அரசு இதுவரை செயல்படுத்தியுள்ள திட்டங்கள், நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்து மக்களிடம் தெரிவிப்போம். இந்த சுற்றுப்பயணம் முடிந்த பிறகு தேர்தலுக்கு முன்பு மார்ச் மாதத்தில் சித்தராமையா உள்பட நாங்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து மீண்டும் ஒரு சுற்றுப்பயணத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தேர்தல் நேரத்தில் தலைவர்கள் கோவில்கள், மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களுக்கு செல்வது என்பது வழக்கமான ஒன்று. இது நமது கலாசாரம். இதில் தவறு ஒன்றும் இல்லை. சிக்கமகளூரு மற்றும் பெங்களூருவில் கட்சி பொதுக்கூட்டங்களை நடத்தி அதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பங்கேற்க வைப்பது குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

கடுமையாக போராடினார்

ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ. மீதான வீட்டு வசதி நில முறைகேடு வழக்கில் ஊழல் தடுப்பு படையின் சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை நடத்துகிறார்கள். இதில் அரசின் பங்கு எதுவும் இல்லை. குஜராத்தில் எங்கள் கட்சியை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த ராகுல் காந்தி கடுமையாக போராடினார்.

கர்நாடகத்தில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் செய்யும்போது கோவில்கள் மற்றும் மடங்களுக்கு செல்வார். ராகுல் காந்தி கர்நாடகத்திற்கு சுற்றுப்பயணம் செய்யும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பாக பா.ஜனதா தலைவர் அமித்ஷா கர்நாடக தலைவர்களை அழைத்து பேசியுள்ளார்.

தீர்க்க முயற்சி செய்யாதது ஏன்?

இதை பார்க்கும்போது இந்த பிரச்சினையிலும் பா.ஜனதாவினர் அரசியல் நடத்துவது தெளிவாக தெரிகிறது. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பிரச்சினை இருந்து வருகிறது. அப்போது இந்த பிரச்சினையை தீர்க்க முயற்சி செய்யாதது ஏன்?.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார்.


Next Story