மாளிகை கோட்டத்தில் டாஸ்மாக் கடையை மூட வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி குடிபிரியர்கள் போராட்டம்
டாஸ்மாக் கடைக்கு எதிராக கிராம மக்கள் போராடிய நிலையில், கடையை மூட வந்த அதிகாரிகளை குடிபிரியர்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் செய்தனர்.
விருத்தாசலம்,
மாளிகை கோட்டத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிராக கிராம மக்கள் போராடிய நிலையில், கடையை மூட வந்த அதிகாரிகளை குடிபிரியர்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் செய்தனர். கடைக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டம் தொடர்வது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெண்ணாடம் அருகே உள்ள மாளிகை கோட்டம் கிராமத்தில் வயல்வெளி பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று கடந்த 18–ந்தேதி திறக்கப்பட்டது. கிராம மக்களின் பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி இந்த கடை திறக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் கடை திறக்கப்பட்ட போது, கிராம மக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அப்போது, கடையை உடனடியாக மூடக்கோரி கோஷங்களை எழுப்பினர். இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த, திட்டக்குடி தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகளையும் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சற்குணம்(வயது 40) என்பவர், மண்எண்ணெய் கேனுடன் அங்கு வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என்று கூறி குடிபிரியர்களும் போராட்டம் செய்தனர்.
கிராம மக்களின் போராட்டம் எதிரொலியாக, நேற்று திட்டக்குடி மண்டல துணை தாசில்தார் ஜெயச்சந்திரன், பெண்ணாடம் வருவாய் ஆய்வாளர் சிவகண்டன் ஆகியோர் டாஸ்மாக் கடையை மூடுவதற்காக மாளிகை கோட்டம் கிராமத்துக்கு நேற்று மதியம் வந்தனர்.
இதுபற்றி அறிந்த குடிபிரியர்கள் ஏராளமானவர்கள் அங்கு திரண்டு வந்தனர். தொடர்ந்து அவர்கள் அதிகாரிகளிடம் இந்த டாஸ்மாக் கடையை மூடக்கூடாது, எங்களுக்கு எங்கள் கிராமத்திலேயே மது அருந்துவதற்கு வசதியாக இந்த கடை அமைந்துள்ளது, எனவே கடையை மூட விடமாட்டோம் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து அவர்கள், கடையின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது டாஸ்மாக் கடைக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியவாறு, மண்டல துணை தாசில்தார் ஜெயச்சந்திரனை முற்றுகையிட்டனர். இதையடுத்து, அவர் டாஸ்மாக் கடையை மூடும் முயற்சியை கைவிடுவதாக தெரிவித்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த குடிபிரியர்கள், தங்களது போராட்டத்தை விலக்கி கொண்டனர். இதையடுத்து கடை திறக்கப்பட்டு, மது விற்பனை ஜோராக நடந்தது.
நேற்று முன்தினம் கிராமத்து மக்கள் ஒன்று திரண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியதன் எதிரொலியாக நேற்று கடைய மூடுவதற்கு வந்த அதிகாரிகளை குடிபிரியர்கள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.