விருத்தாசலம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்


விருத்தாசலம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2017 3:30 AM IST (Updated: 21 Dec 2017 3:03 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கம்மாபுரம்,

விருத்தாசலம் அருகே உள்ளது ஊ.அகரம் கிராமம். இந்த பகுதி வழியாக விருத்தாசலம்–கடலூர் ரெயில்வே தண்டவாளம் செல்கிறது. இவ்வழியாக பெங்களூரு–காரைக்கால், சேலம், கடலூர், விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட ஊர்களுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் என்.எல்.சி. சுரங்கத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிச்செல்லும் வகையிலும் இந்த பகுதியில் ரெயில்வே தண்டவாளம் அமைந்துள்ளது.

ஊ.அகரத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தின் மறுபுறம் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்கள் உள்ளன. இந்த நிலப்பகுதிக்கு விருத்தாசலம்–கடலூர் இடையே ஊ.அகரத்தில் உள்ள ரெயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் ரெயில்வே கேட் இருந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று ரெயில்வே ஊழியர்கள் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்காக பொக்லைன் எந்திரத்துடன் ஊ.அகரம் கிராமத்துக்கு வந்தனர்.

இதுபற்றி அறிந்த அந்த பகுதி மக்கள் சுரங்கப்பாதை அமைய இருந்த இடத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது கிராம மக்கள், இந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால் விளைநிலத்தில் அறுவடை செய்யப்பட்ட பொருட்களை வாகனங்களில் ஏற்றி வெளியூர்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படும். மேலும் நெல் அறுவடை எந்திரங்களை விளைநிலங்களுக்கு கொண்டு வர முடியாமல் போகும். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அதனால் இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கக்கூடாது என்று கூறினர்.

இந்த நிலையில் கிராம மக்களின் போராட்டத்தால், ரெயில்வே ஊழியர்கள் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை தொடங்காமலேயே அங்கிருந்து சென்றனர்.

இந்நிலையில் ஊத்தாங்கால் கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நடைபெறுவது பற்றி அறிந்த ஊ.அகரம் கிராம மக்கள், அங்கு சென்று மாவட்ட வருவாய் அலுவலர் விஜயாவை சந்தித்து தங்கள் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க கூடாது என்று முறையிட்டனர். அதற்கு அவர், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story