நானார் சுத்திகரிப்பு திட்ட விவகாரம்: முதல்–மந்திரி பட்னாவிசுக்கு மத்திய மந்திரி ஆனந்த் கீதே கண்டனம்


நானார் சுத்திகரிப்பு திட்ட விவகாரம்: முதல்–மந்திரி பட்னாவிசுக்கு மத்திய மந்திரி ஆனந்த் கீதே கண்டனம்
x
தினத்தந்தி 21 Dec 2017 3:30 AM IST (Updated: 21 Dec 2017 3:11 AM IST)
t-max-icont-min-icon

நானார் சுத்திகரிப்பு திட்ட விவகாரத்தில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு மத்திய மந்திரி ஆனந்த் கீதே கண்டனம் தெரிவித்தார்.

மும்பை,

நானார் சுத்திகரிப்பு திட்ட விவகாரத்தில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு மத்திய மந்திரி ஆனந்த் கீதே கண்டனம் தெரிவித்தார்.

சுத்திகரிப்பு திட்டம்

ராய்காட் மாவட்டத்தில் ரூ.1 லட்சம் கோடி மதிப்பீட்டில் நானார் சுத்திகரிப்பு திட்டத்தை நிறுவ மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி, சுமார் 14 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்துக்கு உள்ளூர் பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில், நானார் சுத்திகரிப்பு திட்டத்துக்கு ஆதரவாக மத்திய கனரக தொழில் மந்திரியும், சிவசேனா மூத்த தலைவருமான ஆனந்த் கீதே, ரத்னகிரி– சிந்துதுர்க் எம்.பி. விநாயக் ராவுத் ஆகியோர் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசை சந்தித்து பேசி, மனு அளித்ததாக சமீபத்தில் ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஆனந்த் கீதே கண்டனம்

இதற்கு மத்திய மந்திரி ஆனந்த் கீதே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘நானார் சுத்திகரிப்பு திட்டத்தால் 14 கிராம மக்கள் பாதிக்கப்படுவர். பொதுமக்களை பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் சிவசேனா ஏற்காது. முதல்–மந்திரியை நான் சந்தித்து பேசியதாக வெளியான அறிக்கை ஆச்சரியம் அளிக்கிறது. அது முற்றிலும் தவறானது’’ என்றார்.

விநாயக் ராவுத் எம்.பி. கூறும்போது, ‘‘நானார் சுத்திகரிப்பு திட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் எதிர்க்கிறோம். இது சுத்திகரிப்பு திட்டம் அல்ல. சாவுக்கான அழைப்பு. இத்திட்டத்துக்கு ஆதரவாக நாங்கள் யாரையும் சந்தித்து பேசவில்லை. முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசை நான் சந்தித்து பேசியதற்கான ஆதாரத்தை அவர் வெளியிடட்டும்’’ என்றார்.


Next Story