டாஸ்மாக் கடைகளுக்கு வாரத்தில் ஒருநாள் விடுப்பு


டாஸ்மாக் கடைகளுக்கு வாரத்தில் ஒருநாள் விடுப்பு
x
தினத்தந்தி 22 Dec 2017 4:15 AM IST (Updated: 22 Dec 2017 1:07 AM IST)
t-max-icont-min-icon

மதுவிலக்கை அமல்படுத்தும் முயற்சியாக டாஸ்மாக் கடைகளுக்கு வாரத்தில் ஒருநாள் விடுப்பு, பணியாளர் சங்க மாநில தலைவர் வலியுறுத்தல்.

திண்டுக்கல்,

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தும் முயற்சியாக டாஸ்மாக் கடைகளுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் பெரியசாமி வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா படிப்படியாக மது விலக்கை அமல்படுத்தும் விதமாக 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 500 மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். மேலும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையோரங்களில் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி தற்போது 1,200-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதை டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வரவேற்கிறது. இதன் மூலம் வேலை இழக்கும் பணியாளர்களை, அரசின் பிற துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களில் பணியமர்த்த வேண்டும். அப்போது அவர்களுக்கு பணி மூப்பு வழங்க வேண்டும். மதுக்கடைகள் இயங்கும் நேரத்தை மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை மாற்ற வேண்டும்.

மேலும் வாரத்தில் ஒருநாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். தமிழக அரசு மதுவிலக்கை அமல்படுத்தவில்லை என்றால், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, டாஸ்மாக் பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும்.

பணிக்காலத்தில் பணியாளர்கள் இறந்தால் அவர்களின் குடும்பத்துக்கு ரூ.7 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இதற்கு முன்பு இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் நடக்கும் திருட்டு மற்றும் கல்வீச்சு சம்பவங்களால் ஏற்படும் இழப்புகளை பணியாளர்களிடம் வசூலிக்கக்கூடாது. டாஸ்மாக் பணியாளர்களை இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்க்க வேண்டும். உரிமம் இல்லாமல் செயல்படும் மது பார்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெறும் பணியாளர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் மற்றும் மதுரை அப்போலோ மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ விழிப்புணர்வு முகாமுக்கு மாநில தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். உதவி கலால் ஆணையர் சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட மேலாளர் பாலமுருகன் முகாமை தொடங்கி வைத்தார். மாநில பொது மேலாளர் தனசேகரன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இதயநோய், பொதுமருத்துவம், மகப்பேறு, குழந்தைகள் நலம் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

Next Story