கொருக்குப்பேட்டை வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட வந்தவரை இறந்துவிட்டதாக கூறிய தேர்தல் அதிகாரிகள்
சென்னை கொருக்குப்பேட்டையில் வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட வந்த ஒருவரை இறந்துவிட்டதாக தேர்தல் அலுவலர்கள் கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
சென்னை,
சென்னை கொருக்குப்பேட்டை அன்னை சத்யாநகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் எம்.மணி. ஆட்டோ டிரைவர். இவர், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி நேற்று கொருக்குப்பேட்டை எம்.ஜி.ஆர்.நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு ஓட்டுப்போட சென்றார். அங்குள்ள தேர்தல் அலுவலரிடம் தனது பெயர் மற்றும் முகவரியை கூறி ஓட்டுப்போட ஆயத்தமானார்.
அப்போது அங்குள்ள தேர்தல் அலுவலர் ஒருவர், “நீங்கள் இறந்துவிட்டதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதனால் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. எனவே நீங்கள் வாக்களிக்க முடியாது” என்று தெரிவித்தார். இதனால் ஆட்டோ டிரைவர் மணி அதிர்ச்சி அடைந்தார்.
புகார்
தான் கையோடு எடுத்து வந்திருந்த ஓட்டுனர் உரிமம் (லைசென்ஸ்), ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் கடந்த முறை ஆர்.கே.நகரில் ரத்தான இடைத்தேர்தலின்போது வழங்கப்பட்ட பூத் சிலிப் ஆகியவற்றை வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர்களிடம் காட்டினார். ஆனால், ‘வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் எந்த சூழ்நிலையிலும் உங்களை ஓட்டுப்போட அனுமதிக்க முடியாது’ என்று அலுவலர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.
இதனால் கடும் ஏமாற்றத்துடன் தண்டையார்ப்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு வந்தார். அங்கு தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீண் நாயரை சந்தித்து இதுசம்பந்தமாக புகார் அளித்தார்.
பூத் சிலிப்பில் குளறுபடி
பழைய வண்ணாரப்பேட்டை வரதப்பா செட்டி தெருவில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், கூலித்தொழிலாளி காத்தவன் என்பவர் வாக்குச்சாவடி அலுவலரிடம், ‘பூத் சிலிப்பில் அனைத்து விவரங்களும் சரியாக இருக்கிறது. ஆனால் எனக்கு பதிலாக என் மனைவி புகைப்படம் இடம் பெற்றுள்ளது’ என்று கூறினார். பின்னர் தனக்குரிய எல்லா ஆவணங்களை அலுவலர்களிடம் காத்தவன் முன்வைத்தார். அதனைத்தொடர்ந்து காத்தவன் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்.
Related Tags :
Next Story