மாவட்டம் முழுவதும் 57,296 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்


மாவட்டம் முழுவதும் 57,296 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்
x
தினத்தந்தி 22 Dec 2017 4:15 AM IST (Updated: 22 Dec 2017 1:46 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டம் முழுவதும் 57 ஆயிரத்து 296 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் நாட்ராயன் தெரிவித்தார்.

கடலூர்,

தமிழக அரசு சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய அரசாணை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்து வந்தனர். இதில் கடன் பெறாத விவசாயிகள் காப்பீடு செய்ய மாவட்ட நிர்வாகம் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வந்தது.

இதன்படி மாவட்டத்தில் உள்ள 168 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், 85 பொது சேவை மையங்கள் மற்றும் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஒரு ஏக்கர் நெற்பயிருக்கு ரூ.390 பிரீமிய தொகை கட்ட வேண்டும். முழுமையாக பயிர்கள் சேதமடைந்தால் ஏக்கருக்கு ரூ.26 ஆயிரம் விவசாயிகளுக்கு கிடைக்கும்.

அதைத்தொடர்ந்து விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய முன்மொழிவு படிவம், சிட்டா, அடங்கல் போன்ற தேவையான ஆவணங்களை வங்கிகளில் கொடுத்து காப்பீடு செய்து வந்தனர். காப்பீடு செய்ய கடந்த மாதம் 30-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் விவசாயிகள் ஆர்வத்துடன் சென்று காப்பீடு செய்து வந்தனர்.

இது பற்றி வேளாண்மை இணை இயக்குனர் நாட்ராயன் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் 2¼ லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அதில் 1 லட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி விவசாயிகள் காப்பீடு செய்து வந்தனர். பயிர் காப்பீடு செய்ய கடந்த மாதம் 30-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. அதில் 26 ஆயிரத்து 215 கடன் பெற்ற விவசாயிகளும், 31 ஆயிரத்து 81 கடன் பெறாத விவசாயிகள் என மொத்தம் 57 ஆயிரத்து 296 விவசாயிகள் 1 லட்சத்து 18 ஆயிரம் ஏக்கர் பயிர்களை காப்பீடு செய்துள்ளனர் என்றார்.

இது பற்றி கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரவீந்திரனிடம் கேட்ட போது, கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த 11 ஆயிரத்து 500 விவசாயிகளுக்கு ரூ.20 கோடியே 60 லட்சம் நிலுவைத்தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்கவில்லை. அதை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆண்டு 47 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர். இந்த ஆண்டு 57 ஆயிரத்து 296 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளார்கள். இது மாவட்ட நிர்வாகத்தின் முயற்சி. ஆனால் காப்பீட்டு நிறுவனம் எவ்வித முயற்சியையும் எடுக்கவில்லை என்றார்.

Next Story