முறையாக பொருட்கள் வழங்க கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு இளைஞர் மன்றத்தினர் போராட்டம்


முறையாக பொருட்கள் வழங்க கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு இளைஞர் மன்றத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 21 Dec 2017 10:45 PM GMT (Updated: 2017-12-22T01:51:37+05:30)

சேலத்தில், முறையாக பொருட்கள் வழங்க கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு இளைஞர் பெருமன்றத்தினர் போராட்டம் நடத்தினர்.

சேலம்,

சேலம் மணியனூர் காந்தி நகரில் ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் சர்க்கரை, கோதுமை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்தனர். இந்த ரேஷன் கடையில் பயனாளிகளுக்கு முறையாக பொருட்கள் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், பொருட்கள் கடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில் ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்கவும், முறையாக பொருட்கள் வழங்க கோரியும் நேற்று அனைத்திந்திய இளைஞர் மன்றத்தின் கிளை தலைவர் ஜெரால்டு தலைமையில் ஏராளமானவர்கள் அந்த கடை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் திடீரென கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, ‘காந்தி நகரில் உள்ள இந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட்கள் வழங்கப்படாமல் பதுக்கி வைத்து கடத்தப்படுகிறது. இதை உடனடியாக அதிகாரிகள் தடுத்து நிறுத்தி கடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எடையளவு குறையாமல் அனைத்து பொருட்களும் வழங்க வேண்டும்‘ என்றனர். 

Next Story