குடிநீரை பகிர்ந்துகொள்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்த தயார் எடியூரப்பாவுக்கு, மனோகர் பாரிக்கர் கடிதம்


குடிநீரை பகிர்ந்துகொள்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்த தயார் எடியூரப்பாவுக்கு, மனோகர் பாரிக்கர் கடிதம்
x
தினத்தந்தி 22 Dec 2017 3:00 AM IST (Updated: 22 Dec 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

மகதாயி நதிநீர் விவகாரம் தொடர்பாக எடியூரப்பாவுக்கு, கோவா மாநில முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர் கடிதம் எழுதியுள்ளார்.

பெங்களூரு,

மகதாயி நதிநீர் விவகாரம் தொடர்பாக எடியூரப்பாவுக்கு, கோவா மாநில முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர் கடிதம் எழுதியுள்ளார். அதில், குடிநீரை நியாயமான முறையில் பகிர்ந்துகொள்வது குறித்து பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மனோகர் பாரிக்கர் கடிதம்

டெல்லியில் நேற்று முன்தினம் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை, கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா சந்தித்து பேசினார். அவருடன் கோவா மாநில முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர், கர்நாடக மாநில பா.ஜனதா முன்னணி தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், பிரகலாத் ஜோஷி, மத்திய மந்திரிகள் பியூஸ்கோயல், அனந்தகுமார் உள்ளிட்டோர் இருந்தார்கள். இந்த சந்திப்பின் போது கர்நாடகம், கோவா, மராட்டிய மாநிலங்களுக்கு இடையே உள்ள மகதாயி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை குறித்து விவாதித்ததாக தெரிகிறது.

பின்னர் மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து 21–ந்தேதி (அதாவது நேற்று) மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து உப்பள்ளியில் நடக்கும் மாநாட்டின் போது முக்கிய முடிவை வெளியிடுவேன் என்று எடியூரப்பா கூறினார். இதனால் மகதாயி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை முடிவுக்கு வரும் என்று வடகர்நாடக மக்கள் நினைத்தனர். இந்த நிலையில், எடியூரப்பாவுக்கு கோவா மாநில முதல்–மந்திரி மனோகர் பாரிக்கர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

பேச்சு வார்த்தை நடத்த தயார்

மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பாக நீங்கள் எழுதி இருந்த கடிதம் எனக்கு கிடைத்தது. கர்நாடக மாநிலத்தில் உள்ள வடகர்நாடக மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவுவதாகவும், குடிநீர் தட்டுப்பாடு இருப்பது பற்றியும் நீங்கள் ஏற்கனவே எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தீர்கள். மகதாயி நதிநீர் பிரச்சினை தொடர்பான வழக்கு மகதாயி நதிநீர் பங்கீட்டு தீர்ப்பாயத்தில் உள்ளது. அந்த வழக்கு பற்றி உங்களுக்கு நன்கு தெரியும். அந்த வழக்கில் குடிநீர் தேவைக்கான தண்ணீரை பங்கீட்டு கொள்வதும் ஒன்றதாகும். கொள்கை ரீதியாக வடகர்நாடக மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க கோவா அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

குடிநீரை நியாயமான முறையில் பகிர்ந்துகொள்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்த கோவா அரசு தயாராக உள்ளது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை. இந்த பிரச்சினையை இருதரப்பினரும் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்து கொள்ளலாம். குடிநீர் மனிதனின் அடிப்படை தேவையாகும். மனிதாபிமான அடிப்படையில் இந்த பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக்கொள்ள கோவா அரசு பரிசீலித்து வருகிறது. ஏற்கனவே நதிநீர் பங்கீட்டு தொடர்பான வழக்கு நடந்து வருவதால், அந்த வழக்குக்கு பாதிக்காத அளவுக்கு பேச்சு வார்த்தை நடத்தலாம். தீர்ப்பாயமும் அதனை தான் சொல்கிறது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


Next Story