கார் உரிமையாளர் புகாரை வாங்க மறுத்த சம்பவம் இன்ஸ்பெக்டர், 2 சப்–இன்ஸ்பெக்டர்கள் பணி இடைநீக்கம்
ஆயுத கடத்தலில் பயன்படுத்தப்பட்ட கார் உரிமையாளரின் புகாரை வாங்க மறுத்த சம்பவத்தில் அம்போலி போலீஸ்நிலைய இன்ஸ்பெக்டர், 2 சப்–இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். ஆயுத கடத்தல் சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள குடோனில் இருந்து
மும்பை,
ஆயுத கடத்தலில் பயன்படுத்தப்பட்ட கார் உரிமையாளரின் புகாரை வாங்க மறுத்த சம்பவத்தில் அம்போலி போலீஸ்நிலைய இன்ஸ்பெக்டர், 2 சப்–இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
ஆயுத கடத்தல் சம்பவம்உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள குடோனில் இருந்து ஆயுதங்களை திருடிய ஒரு கும்பல் கடந்த வாரம் அதை காரில் மும்பைக்கு கடத்தி வந்தது. இந்த கும்பல் நாசிக்கில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் காருக்கு டீசல் போட்டுவிட்டு, பணம் கொடுக்காமல் தப்பிச்சென்றது. பெட்ரோல் பங்க் உரிமையாளர் அளித்த புகாரின்பேரில் நாசிக் புறநகர் பகுதி நெடுஞ்சாலையில் போலீசார் அந்த காரை மடக்கி பிடித்தனர். மேலும் காரில் ரகசிய அறை அமைத்து மறைத்து வைக்கப்பட்டு இருந்த 45 துப்பாக்கிகள் மற்றும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தில் போலீசார் ஆயுதங்களை திருடி கடத்தியவர்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை திருடியவர்கள், ஆயுதங்களை பதுக்கி வைக்கும் வகையில் காரில் அறையை வடிவமைத்த மெக்கானிக் உள்பட இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர்.
புகார் வாங்க மறுப்புஆயுத கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பெரோஷ் கான் என்பவருக்கு சொந்தமானது ஆகும். அவர் மும்பை மேற்கு புறநகர் பகுதியில் நிறுத்தியிருந்த போது கார் திருடப்பட்டுள்ளது. இது குறித்து பெரோஷ் கான் அம்போலி போலீசில் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது பணியில் இருந்த சப்–இன்ஸ்பெக்டர் கணேஷ் தேவ்காதே புகாரை வாங்க மறுத்துவிட்டார். அவர், 2 நாட்கள் அருகில் உள்ள பகுதியில் தேடிப்பார்த்துவிட்டு, கார் கிடைக்கவில்லையென்றால் மீண்டும் வந்து புகார் அளிக்க வருமாறு கூறிவிட்டார்.
இந்தநிலையில் 2 நாள் கழித்து மீண்டும் காரின் உரிமையாளர் புகார் அளிக்க சென்றுள்ளார். அப்போது, போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டர் காத்தே பணியில் இருந்துள்ளார். அவரும் பெரோஷ் கானின் புகாரை வாங்க மறுத்துவிட்டார். மேலும் அவர் கணேஷ் தேவ்காதே பணிக்கு வந்த பிறகு அவரிடம் புகார் அளிக்குமாறு கூறியுள்ளார்.
3 பேர் பணி இடைநீக்கம்இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்டவரின் புகாரை வாங்க மறுத்து பணியில் அலட்சியமாக இருந்ததாக சப்–இன்ஸ்பெக்டர்கள் கணேஷ் தேவ்காதே மற்றும் காத்தே ஆகியோர் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் போலீஸ் நிலையத்தில் நடப்பதை கண்காணிக்க தவறியதாக இன்ஸ்பெக்டர் கஜனன் சாகரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.