காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி


காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் செய்ய முயற்சி
x
தினத்தந்தி 23 Dec 2017 3:30 AM IST (Updated: 23 Dec 2017 12:08 AM IST)
t-max-icont-min-icon

காட்டுமன்னார்கோவில் அருகே 5 மாதங்களாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு இருந்து வரும் நிலையில் ஆத்திரமடைந்த கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்ய முயன்றனர்.

காட்டுமன்னார்கோவில்,

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது உத்திரசோலை ஊராட்சி. குமராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட இந்த ஊராட்சி பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இங்குள்ள இருதயபுரம் கிராமத்தில் கிழக்கு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இந்த பகுதிக்கு கடந்த 5 மாதங்களுக்கு மேலாகவே ஊராட்சி நிர்வாகத்தில் இருந்து சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அருகில் உள்ள விளை நிலம், கிராம பகுதிக்கு சென்று மக்கள் குடிநீர் பிடித்து வருகின்றனர்.

இந்த கிராமத்துக்கு அருகே உள்ள எய்யலூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்துக்கு தற்போது சாலையை தோண்டி புதிதாக குழாய் பதிக்கும் பணி நடந்தது. இந்த பணியின் போது இருதயபுரம் கிராமத்துக்கு வந்த குடிநீர் குழாய் சேதப்படுத்தப்பட்டதால், தான் சரியான முறையில் குடிநீர் வருவதில்லை என்று இந்த பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் அதிகாரிகள் யாரும் இதை கண்டுகொள்ளாமல், அலட்சியமாக இருந்தனர்.

இந்த நிலையில், பாதிப்புக்குள்ளான கிராம மக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் சாலை மறியல் செய்வதற்காக ரம்ஜான்தைக்கால் பஸ் நிறுத்தம் அருகே சிதம்பரம்-திருச்சி நெடுஞ்சாலையில் ஒன்று திரண்டனர். இதுபற்றி தகவல் அறிந்த காட்டுமன்னார் கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியல் செய்ய வந்தவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள் எங்கள் பகுதிக்கு கடந்த 5 மாதங்களுக்கு மேலாக குடிநீர் சரியான முறையில் வருவது இல்லை, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்துக்கு குழாய் பதிப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டதில் சாலைகள் அனைத்தும் சேதமாகிவிட்டன. இதை உடனடியாக சரிசெய்து தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதையடுத்து போலீசார், குமராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமாரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினர். அவர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து கிராம மக்களிடம் போலீசார் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அதிகாரி உறுதியளித்து இருப்பதாக தெரிவித்தனர். இதையேற்று அனைவரும் மறியல் முயற்சியை கைவிடுவதாக தெரிவித்து, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story