ரூ.36 லட்சத்தை பெற்று தரக்கோரி மறியல் செய்ய திரண்ட விவசாயிகள்


ரூ.36 லட்சத்தை பெற்று தரக்கோரி மறியல் செய்ய திரண்ட விவசாயிகள்
x
தினத்தந்தி 23 Dec 2017 4:00 AM IST (Updated: 23 Dec 2017 12:16 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டியில் தனியார் பால் கொள்முதல் நிறுவனத்திடம் இருந்து, தங்களுக்கு சேரவேண்டிய ரூ.36 லட்சத்தை பெற்று தரக்கோரி விவசாயிகள் சாலை மறியல் செய்ய திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ளது பைத்தான்பாடி சத்திரம் கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான பால் கொள்முதல் நிறுவனம் ஒன்று இருந்தது. இதில் அந்த பகுதியை சுற்றிலும் உள்ள கிராம விவசாயிகள் பால் வழங்கி வந்தனர்.

இதன் மூலம், அந்த நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளுக்கு 36 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டியது இருந்தது. திடீரென, கடந்த 6 மாதத்துக்கு முன்பு பால் கொள்முதல் நிலையத்தை பூட்டிவிட்டு அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சென்றுவிட்டனர்.

இதையடுத்து, பாதிப்புக் கு ள்ளான விவசாயிகள், தங்களது பணத்தை சம்பந்தப்பட்ட பால் கொள்முதல் நிலையத்தின் உரிமையாளர்களிடம் இருந்து வாங்கி தரக்கோரி பல கட்ட போராட்டங்களை நடத்தியதுடன், அதிகாரிகளிடமும் முறையிட்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் பண்ருட்டி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக விவசாயிகள் அறிவித்து இருந்த நிலையில், தாசில்தார் விஜய் ஆனந்த் விவசாயிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் விரைவில் தங்களுக்கு சேரவேண்டிய பணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்தாரிடம் இருந்து பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார். ஆனால் நாட்கள் கடந்து சென்றும், இதுவரையில் பணம் விவசாயிகள் கைக்கு வந்து சேரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் மக்கள் பாதுகாப்பு கவசம் என்கிற அமைப்புடன் இணைந்து சாலை மறியல் செய்ய போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று காலை விவசாயிகள், மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பின் நிர்வாகிகள் பண்ருட்டியில் கடலூர் சாலையில் உள்ள பயணியர் விடுதி அருகே ஒன்று திரண்டனர்.

தொடர்ந்து அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் செய்ய அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த தாசில்தார் விஜய் ஆனந்த், புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் அங்கு வந்து, அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் வருகிற 29-ந்தேதிக்குள் தனியார் பால் கொள்முதல் நிறுவனத்தின் உரிமையாளரை அழைத்து சுமூக தீர்வு ஏற்படுத்தி தரப்படும் என்று உறுதி அளித்தனர். இதையேற்று விவசாயிகள் தங்கள் மறியல் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

இதில் மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பை சேர்ந்த சேதுராஜன், தட்சிணாமூர்த்தி, அதன் நிர்வாகிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story