இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கல்லறையில் தினகரன் அஞ்சலி


இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கல்லறையில் தினகரன் அஞ்சலி
x
தினத்தந்தி 23 Dec 2017 2:30 AM IST (Updated: 23 Dec 2017 12:21 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கல்லறையில் தினகரன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

சங்கரன்கோவில்,

போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கல்லறையில் தினகரன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பெரியபாண்டியன் கல்லறையில் மரியாதை

ராஜஸ்தான் மாநிலத்தில் கொள்ளையர்களை பிடிக்க சென்ற சென்னை மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவரது உடல் அடக்கம் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மூவிருந்தாளி சாலைப்புதூரில் நடந்தது.

இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் நேற்று மாலையில் மூவிருந்தாளி சாலைப்புதூருக்கு சென்று, போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் கல்லறையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர், பெரியபாண்டியனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து டி.டி.வி.தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

கூடுதல் போலீசாரை...

வெளிமாநிலங்களில் கொள்ளையர்களை பிடிப்பதற்காக குறைந்த எண்ணிக்கையிலான போலீசாரை அனுப்பக்கூடாது. கூடுதல் போலீசாரை அனுப்ப வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்துக்கு கொள்ளையர்களை பிடிக்க கூடுதல் போலீசாரை அனுப்பி இருந்தால், நேர்மையான போலீஸ் அதிகாரி பெரியபாண்டியனை நாம் இழந்திருக்க வேண்டாம். கொள்ளையர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு அறிவித்த நிவாரணத்தொகையை வழங்கும் என்று நம்புகிறேன்.

பெரியபாண்டியன் கொலை செய்யப்பட்டதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் பதிவான கைரேகைகளை ராஜஸ்தான் மாநில போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த அறிக்கை வெளியான பிறகுதான் பெரியபாண்டியன் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். இங்கு பெரியபாண்டியனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காகவே வந்தேன். எனவே மற்ற அரசியல் பற்றி பேச விரும்பவில்லை.

இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

முன்னதாக மதுரையில் இருந்து கோவில்பட்டி, கழுகுமலை, சங்கரன்கோவில் வழியாக மூவிருந்தாளி சாலைப்புதூருக்கு காரில் வந்த டி.டி.வி.தினகரனுக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்செல்வன், உமா மகேசுவரி, சுந்தரராஜன், அமைப்பு செயலாளர்கள் மாணிக்கராஜா, ஆர்த்தி ஆதித்தன், மாவட்ட செயலாளர்கள் பாப்புலர் முத்தையா (நெல்லை மாநகர்), சொக்கலிங்கம் (நெல்லை புறநகர்), முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், மாவட்ட மாணவர் அணி பொருளாளர் பால் கண்ணன் மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்.கே.நகரில் வெற்றி பெறுவேன்

கோவில்பட்டியில் டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறுகையில், ஆர்.கே.நகர் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தமிழகத்தில் மக்கள் தேர்ந்தெடுத்த அரசு இருக்கும்போது, கவர்னர் சென்று ஆய்வு செய்வது தவறானது. மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் அம்ருதா என்று கூறுவது பொய்யான தகவல்.

ஓ.பன்னீர்செல்வத்தை 2001–ல் இருந்துதான் ஜெயலலிதாவுக்கு தெரியும். 2 ஜி வழக்கு தீர்ப்பால் தமிழகத்தில் எந்தவித அரசியல் மாற்றமும் நிகழப்போவது இல்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போலீசாரும், உளவு துறையினரும் எங்களை மட்டுமே கண்காணித்தனர் என்றார். கோவில்பட்டி நகர எல்லையில் டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story