பயிர் காப்பீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்: கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை; 106 பேர் கைது


பயிர் காப்பீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்: கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகை; 106 பேர் கைது
x
தினத்தந்தி 23 Dec 2017 3:00 AM IST (Updated: 23 Dec 2017 12:39 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் பயிர் காப்பீட்டில் முறைகேடு நடந்ததாக கூறி கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் பயிர் காப்பீட்டில் முறைகேடு நடந்ததாக கூறி கூட்டுறவு சங்கத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதில் 106 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூட்டுறவு சங்கம் முற்றுகை

கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இங்கு கடந்த 2015–2016–ம் ஆண்டு பயிர் காப்பீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகவும், தமிழக அரசு அறிவித்த பயிர் கடன் தள்ளுபடியில் சிறு விவசாயிகள் பட்டியலை முறைகேடாக தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்தது.

எனவே முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு சங்க செயலாளர், ஊழியரை பணியிட நீக்கம் செய்ய வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர். அவர்கள் கூட்டுறவு சங்கத்தை திறக்க விடாமல், அதன் முன்பாக அமர்ந்து இருந்தனர்.

106 பேர் கைது

பாரதீய கிசான் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ரங்கநாயகலு, மாவட்ட செயலாளர் சேசு நாயக்கர், துணை தலைவர் பரமேசுவரன், இயற்கை விவசாய சங்க தலைவர் கிருஷ்ணசாமி, ஒன்றிய செயலாளர் பாலமுருகன், தென் இந்திய விவசாயிகள் சங்க தலைவர் பாலமுருகன், இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் லட்சுமிகாந்தன் மற்றும் கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு உறுப்பினர்கள், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

உடனே கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அனுமதியின்றி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக 66 பெண்கள் உள்பட 106 பேரை கைது செய்து, அங்குள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பேச்சுவார்த்தை

தொடர்ந்து கோவில்பட்டி கூட்டுறவு சார்பதிவாளர்கள் சாமி, ஜெயமணி, செண்பகவல்லி ஆகியோர் விவசாயிகள் தங்க வைக்கப்பட்ட மண்டபத்துக்கு சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வில்லிசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு, ஒரு வாரத்தில் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை சமர்ப்பித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தனர்.


Next Story