ஏ.டி.எம்.கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஓட்டல் உரிமையாளர்


ஏ.டி.எம்.கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ஓட்டல் உரிமையாளர்
x
தினத்தந்தி 23 Dec 2017 6:00 AM IST (Updated: 23 Dec 2017 1:41 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பரபரப்பை ஏற்படுத்திய ஏ.டி.எம். கொள்ளையர்களுக்கு ஓட்டல் உரிமையாளர் ஒருவர் அடைக்கலம் கொடுத்துள்ளார். அங்கு தான் கொள்ளையர்கள் 2 நாட்கள் தங்கியிருந்து திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவை,

கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் ரோட்டில் உள்ள 2 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.30 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்த மோஷம்கான், அமீன், சுல்பிஹீர், அமீத்குமார், சுபேர், முபாரக், முஸ்தாக், மற்றொரு சுபேர் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் தலைமறைவாகிவிட்ட கொள்ளை கும்பல் தலைவனான அரியானா மாநிலத்தை சேர்ந்த அஸ்லாம், அவருடைய காதலி கிரண் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். கைதான 8 பேரை போலீசார் கடந்த 15-ந் தேதி 8 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.

அவர்கள் 8 பேருக்கும் நேற்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்தது. இதனால் அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் கோவை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். பிறகு அவர்களை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். அவர்கள் 8 பேரையும் வருகிற 5-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு ராஜவேலு உத்தரவிட்டார்.

இதையடுத்து போலீசார் அவர்களை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த 8 நாட்களாக தனிப்படை போலீசார் ஏ.டி.எம். கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.இது குறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது:-

ஏ.டி.எம். கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளியில் நெடுஞ்சாலையோரம் அரியானா மாநிலத்தை சேர்ந்த ஆஷிப் (வயது 25) என்பவர் அரியானா என்ற பெயரில் கடந்த 2 ஆண்டுகளாக ஓட்டல்(தாபா) நடத்தி வந்தார். ஏ.டி.எம். கொள்ளையர்கள் கடந்த 8-ந் தேதி இரவே அந்த ஓட்டலுக்கு வந்து தங்கியுள்ளனர். அங்கு தான் கார்கள் மற்றும் லாரியை நிறுத்தி வைத்துள்ளனர். ஆஷிப் தான் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார், அங்கு வைத்து தான் கொள்ளைக்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

கடந்த 10-ந் தேதி கொள்ளையர்களுடன் ஓட்டல் உரிமையாளர் ஆஷிப்பும் வந்து கொள்ளை நடந்த போது உடன் இருந்துள்ளார். பணத்தை கொள்ளையடித்ததும் கொள்ளையர்கள் அவரை அந்த ஓட்டல் அருகே இறக்கி விட்டு சென்றுள்ளனர்.

அதன்பின்னர் 8 கொள்ளையர்களை பிடித்தவுடனே ஆஷிப் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிப்பதற்காக அங்கு சென்றபோது ஆஷிப் தப்பி சென்று விட்டார். அவர் தனது சொந்த ஊரான அரியானா மாநிலம் நுவா மாவடட்த்துக்கு தப்பி சென்றிருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை பிடிக்க தனிப்படை போலீசார விரைவில் அரியானா மாநிலம் செல்ல உள்ளனர்.

கைதான 8 கொள்ளையர்களும் தமிழ்நாடு, ஆந்திரா, கோவா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஏ.டி.எம்.களை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அந்தந்த மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு உதவி செய்த ஓட்டல் உரிமையாளர் ஆஷிப்பையும் கொள்ளை வழக்கில் சேர்க்கப்படுவார். இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டு ரூ.27 லட்சத்துடன் தலைமறைவான கொள்ளைக் கூட்டத் தலைவன் அஸ்லாம் மற்றும் மனைவி கிரன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இந்த வழக்கில் கொள்ளையர்கள் 8 பேருக்கு எதிரான ஆவணங்கள், சாட்சிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றைக் கொண்டு விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

Next Story