அம்மூர் காப்பு காட்டில் கழுதைப்புலி நடமாட்டம்


அம்மூர் காப்பு காட்டில் கழுதைப்புலி நடமாட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2017 4:15 AM IST (Updated: 23 Dec 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

அம்மூர் காப்புக்காட்டில் கழுதைப்புலி நடமாட்டம் உள்ளதாகவும், இரவு நேரத்தில் யாரும் காட்டுக்குள் செல்லவேண்டாம் என்றும் கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்தார்.

வேலூர்,

வேலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வுநாள் கூட்டம் நேற்று கலெக்டர் ராமன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், பயிற்சி கலெக்டர் ஸ்ரீகாந்த், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திருகுணஅய்யப்பதுரை, வேளாண் இணைஇயக்குனர் வாசுதேவரெட்டி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர். அப்போது விவசாயிகள் பேசியதாவது:-

மாதனூர் பகுதியில் இயற்கை உரம் கிடைப்பதில்லை, அங்கு இயற்கை உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டுவரும் நெல்மூட்டைகளை வைக்க போதிய இடம் இல்லை. அங்கு புதிய கட்டிடம் கட்டவேண்டும். அரக்கோணத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் விவசாயிகளுக்கு தடையில்லா சான்று வழங்குவதற்கு பணம் கேட்கிறார்கள். மேலும் விவசாயத்திற்கு 3 மணிநேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்குகிறார்கள் என விவசாயிகள் குற்றம்சாட்டினர். அதற்கு பகலில் 6 மணிநேரமும், இரவில் 6 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து பேசிய விவசாயிகள் கேரளாவில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,300 வரை கிடைக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு குவிண்டாலுக்கு ரூ.1100 முதல் ரூ.1,200 வரைதான் கிடைக்கிறது. கேரளாவை போன்று தமிழ்நாட்டிலும் ரூ.2,300 கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அம்மூர் காப்புக்காட்டு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதனால் விவசாயவேலைக்கு ஆட்கள் வரமறுக்கிறார்கள். இதன்காரணமாக விவசாயம் செய்ய முடியவில்லை. எனவே சிறுத்தையை வேறு பகுதிகளுக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் ராமன், அம்மூர் காப்புக்காட்டில் சிறுத்தை இல்லை, அங்கிருந்த கால்தடத்தை ஆய்வுசெய்ததில் அந்தப்பகுதியில் கழுதைப்புலி நடமாட்டம் இருப்பது தெரியவந்துள்ளது. அதுவும் ஆபத்தானதுதான். எனவே பொதுமக்கள் இரவு நேரத்தில் காட்டுப்பகுதிக்கு செல்லவேண்டாம் என்றார்.

அதற்கு காட்டுப்பகுதியில் கழுதைப்புலி நடமாட்டம் இருப்பது குறித்து பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Next Story