தாராவியில் குதிரை மிரண்டு ஓடி இடித்து தள்ளியதில் 15 பேர் காயம் சிகரெட்டால் சூடு வைத்ததால் விபரீதம்
தாராவியில், சிகரெட்டால் சூடு வைத்ததில் குதிரை மிரண்டு ஓடி இடித்து தள்ளியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.
மும்பை,
தாராவியில், சிகரெட்டால் சூடு வைத்ததில் குதிரை மிரண்டு ஓடி இடித்து தள்ளியதில் 15 பேர் காயம் அடைந்தனர்.
மிரண்டு ஓடிய குதிரைமும்பை தாராவியை சேர்ந்தவர் முபியன் ரம்ஜான் சேக். குதிரை வளர்த்து வருகிறார். நடைபாதையில் காய்கறி வியாபாரம் செய்பவர்கள் விட்டு செல்லும் கழிவுகளை குதிரைக்கு இரையாக கொடுப்பது வழக்கம். இதற்காக நேற்றுமுன்தினம் இரவு இவர், குதிரையில் சவாரி செய்தபடி சயான் ரெயில் நிலைய பகுதியில் இருந்து தாராவி மெயின்ரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
எப்போதும் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்படும் அந்த சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென குதிரை மிரண்டு உடலை திமிறிக்கொண்டு வேகமாக ஓட்டம் பிடித்தது.
இதில், குதிரையின் மேலே இருந்த முபியன் ரம்ஜான் சேக் சாலையில் விழுந்தார். இந்தநிலையில், தறிகெட்டபடி ஓடிய அந்த குதிரை அந்த வழியாக சென்றவர்கள் மீது துள்ளி குதித்தும், காலால் இடறியபடியும் வேகமாக ஓடியது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு உண்டானது.
15 பேர் காயம்குதிரை இடித்து தள்ளிக்கொண்டு ஓடியதில் சுமார் 15 பேர் கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதில் சலீம் (வயது45), ரியாத் (9), ரியோபால் (32) ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக சயான் மருத்துவமனையில் சேர்க்கப்படனர்.
இதற்கிடையே, அந்த குதிரை தாராவி ஹோலி மைதானத்திற்கு சென்று அமைதியானது. அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் குதிரையை பிடித்து கட்டினர்.
முன்னதாக, குதிரை அமைதியாக வந்து கொண்டிருந்த போது, பின்னால் இருந்து யாரோ மர்மஆசாமி சிகரெட்டால் சூடு வைத்ததன் காரணமாக தான் குதிரை மிரண்டு ஓடியதாக முபியன் ரம்ஜான் சேக் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக தாராவி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.