உயர்கல்வியில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு


உயர்கல்வியில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது அமைச்சர் கே.பி.அன்பழகன் பேச்சு
x
தினத்தந்தி 23 Dec 2017 3:36 AM IST (Updated: 23 Dec 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

உயர்கல்வியில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

கருப்பூர்,

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 41-வது அகில இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக்கான 5 நாள் மாநாடு கடந்த 18-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் 550-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கட்டுரை சமர்ப்பித்தனர். சமூக அறிவியல் புலத்தில் 19 தலைப்புகளில் 50 சிறப்பு சொற்பொழிவுகளுடன் 22 அமர்வுகளாக நடைபெற்ற மாநாட்டில் 22 மாநிலங்களில் இருந்து ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

நேற்று நிறைவு விழா நடந்தது. உயர்கல்வித்துறை அரசு செயலாளர் சுனில்பாலிவால் தலைமை தாங்கி பேசினார். சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் மணிவண்ணன் வரவேற்று பேசினார். இந்திய சமூக அறிவியல் அகாடமி தலைவர் கே.எஸ்.சர்மா, சேலம் கலெக்டர் ரோகிணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

சமூகநிலை வேறுபாடின்றி எல்லோருக்கும் கல்வியும், தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளும் ஆதரவற்றோருக்கு சமூக பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் லட்சிய செயல்பாடாக இருந்தது. அவரது வழியில் அத்திட்டங்களை அயராது தொய்வின்றி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் 2015-16-ம் ஆண்டு அறிக்கையில், அகில இந்திய அளவில் உயர்கல்விக்கான சர்வே வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாடு, உயர்கல்வியில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளதை இங்கு பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன். தமிழகத்தில் மட்டும் 65 புதிய கல்லூரிகளை தொடங்கி சாதனை புரிந்தவர் ஜெயலலிதா. அவரது வழிகாட்டுதலுடன் நடக்கும் இந்த ஆட்சியிலும் 11 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதே வேளையில் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதத்திலும் தமிழ்நாடு உயர்வான நிலையை பெற்றுள்ளது. 18 வயது முதல் 23 வயதுவரை உயர்கல்வியில் சேர்ந்து படிப்போரின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 42.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வான நிலை, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

தேசிய அளவில் உயர்கல்வியின் கேந்திரமாக திகழும் தமிழகத்தை பன்னாட்டு ஆய்வுக்கான மையமாக மாற்றும் அரசின் கொள்கை திட்டங்களை செயல்படுத்த பேராசிரியர் பெருமக்கள் அரசுடன் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், சக்திவேல், மேட்டூர் உதவி கலெக்டர் மேகநாதரெட்டி, பல்கலைக்கழக செய்தி தொடர்பு அலுவலர் விமல் மற்றும் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் இளங்கோவன் நன்றி கூறினார்.

Next Story