நாகர்கோவிலில் மறியலில் ஈடுபட்ட 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 385 பேர் கைது


நாகர்கோவிலில் மறியலில் ஈடுபட்ட 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 385 பேர் கைது
x
தினத்தந்தி 23 Dec 2017 3:52 AM IST (Updated: 23 Dec 2017 3:52 AM IST)
t-max-icont-min-icon

குமரியை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்கக்கோரி நாகர்கோவிலில் மறியல் போராட்டம் நடந்தது. இதுதொடர்பாக 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 385 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியை கூடுதலாக வழங்க வேண்டும், கடலில் காணாமல் போன மீனவர்களை உடனே கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவை உடனே வழங்க வேண்டும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் உடனே வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள் தலைமையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி போராட்டத்தையொட்டி நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கலெக்டர் அலுவலகத்தின் முன்புற வாயில் இரும்புகேட்கள் மூடப்பட்டு, அதன் அருகில் ஏராளமான அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் போராட்டத்துக்கு வருபவர்களை கைது செய்து அழைத்துச் செல்ல வசதியாக ஏராளமான போலீஸ் வாகனங்களும் கலெக்டர் அலுவலகத்தின் உள்புறத்திலும், வெளிப்புறத்திலும் நிறுத்தப்பட்டு இருந்தன.

இந்தநிலையில் காலை 11 மணி அளவில் மறியல் போராட்டம் தொடங்கியது. தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன் (குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்), ஆஸ்டின், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார் (குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்), விஜயதரணி, பிரின்ஸ் ஆகிய 5 பேர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தின் எதிர்புறம் நின்று கொண்டிருந்த தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தின் முன்புறம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து நாகர்கோவில் நகர போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் செட்டிகுளம் சந்திப்பு பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லக்கூடிய பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர்.

மறியல் போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கொடிகளை கையில் பிடித்திருந்தனர். விவசாய அமைப்புகள் சார்பில் மறியலில் பங்கேற்றவர்களுக்கு பச்சை வண்ண துண்டு வழங்கப்பட்டது. போராட்டத்தில் பங்கேற்றவர்கள் “குமரி மாவட்டத்தில் ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், சேதமடைந்த ரப்பர், வாழை, தென்னை, நெல் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், காணாமல் போன மீனவர்களை விரைவாக மீட்க வேண்டும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்“ என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்திருந்தனர்.

இதற்கிடையே போராட்டம் பற்றிய தகவல் அறிந்த நாகர்கோவில் கோட்டாட்சியர் ஜானகி சம்பவ இடத்துக்கு வந்தார். அவருடன், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கரன், துணை சூப்பிரண்டு கோபி ஆகியோரும் எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் எங்களது கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் வந்து உத்தரவாதம் அளிக்கட்டும். அதுவரை நாங்கள் இங்கிருந்து கலையமாட்டோம் என்று கூறி, பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்கவில்லை.

இதனையடுத்து போலீசார், 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 385 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் அரசு பஸ்கள் மற்றும் போலீஸ் வாகனங்களில் ஏற்றி பால்பண்ணை சந்திப்பு அருகில் உள்ள ஒரு மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். முன்னதாக மறியல் போராட்டத்தில் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன் கூறியதாவது:-

கடந்த 30-ந் தேதி குமரி மாவட்டத்தில் வீசிய ஒகி புயலால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே குமரி மாவட்டத்தை பேரிடர் பாதிப்பு மாவட்டமாக அறிவிக்க வேண்டும். புயலால் இறந்தவர்களின் அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.20 லட்சம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு தாமதமின்றி வழங்க வேண்டும். புயல் பாதிப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்பிறகு வந்த முதல்-அமைச்சரும், பிரதமரும் மக்களை ஏமாற்றிச் சென்றுள்ளனர் என்றார். இதேபோல் எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி ஆகியோரும் கோரிக்கைகளை வலியுறுத்தியும், அவற்றை நிறைவேற்றவும் வலியுறுத்தி பேசினார்கள்.

இந்த போராட்டத்தில் தி.மு.க. சார்பில் நிர்வாகிகள் கேட்சன், வக்கீல் மகேஷ், தில்லைச்செல்வம், சிவராஜ், இரா.பெர்னார்டு, ஷேக்தாவூது, எப்.எம்.ராஜரத்தினம், லாரன்ஸ், மதியழகன், உதயகுமார், தாமரைபாரதி, சி.என்.செல்வன், எம்.ஜே.ராஜன், பசலியான், பூதலிங்கம், வளர் அகிலன், சதாசிவன், சற்குரு கண்ணன், நாஞ்சில் மணி, சாய்ராம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், ஐ.என்.டி.யூ.சி. அனந்தகிருஷ்ணன், நிர்வாகிகள் மகேஷ்லாசர், அனிதா, ஜெரால்டு கென்னடி, ராஜதுரை, யூசுப்கான், ஆன்றோ அலெக்ஸ், தங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். விவசாய பிரதிநிதிகள் சார்பில் குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வக்கீல் வின்ஸ் ஆன்றோ, புலவர் செல்லப்பா, பத்மதாஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

முன்னதாக இந்த போராட்டத்தின் போது அவ்வழியாக வந்த ஒரு ஆம்புலன்ஸ் தடையின்றி செல்ல போராட்டக்காரர்கள் வழி ஒதுக்கி கொடுத்தனர். போராட்டத்தில் பங்கேற்ற சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. கையில் ஏற்கனவே ஏற்பட்டிருந்த காயத்துக்கு கட்டுப் போட்ட நிலையில் வந்து பங்கேற்றார். கைதான அனை வரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Next Story