காளானின் கணக்கற்ற நன்மைகள்


காளானின் கணக்கற்ற நன்மைகள்
x
தினத்தந்தி 23 Dec 2017 1:00 PM IST (Updated: 23 Dec 2017 12:10 PM IST)
t-max-icont-min-icon

காய்கறிகள், பழங்களைவிட காளானில் அதிக புரதச் சத்து உள்ளது.

காளானை விரும்பி உண்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது நல்ல விஷயம்தான். இயற்கை தந்த கொடையான காளானில் கணக்கற்ற ஆரோக்கிய அனுகூலங்கள் நிறைந்திருக்கின்றன.

காளான் ரத்தசோகை போக்கும். நீரிழிவு நோயாளிகள் இதைச் சாப்பிடலாம். உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்த நாளங்களின் உட்பரப்பில் கொழுப்பு படிவதை காளான் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் போன்ற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் கலந்துள்ள டிரை கிளிசரைடு, பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

காளானை உணவாக உட்கொள்வதன் மூலம் சத்துப் பற்றாக்குறையை போக்க முடியும். காளான்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் அதிக அளவிலும், கொழுப்பு, மாவுச்சத்துகள் குறைவான அளவிலும் உள்ளன.

காய்கறிகள், பழங்களைவிட காளானில் அதிக புரதச் சத்து உள்ளது. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் இது ரத்தசோகைக்குச் சிறந்த மருந்து.

காளானில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்றவற்றைப் போக்கும். இதயத்தைப் பாதுகாக்கும்.

காளானில் உள்ள வேதிப்பொருட்கள் ரத்த நாளங் களில் ஏற்படும் பாதிப்பைச் சீர்செய்யும். மூட்டு வாதம் உடையவர்களுக்கு காளான் சிறந்த நிவாரணி. மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றையும் காளான் சரிப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்றுநோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டச்சத்தாக அமைகிறது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

வயல்வெளிகள், காடுகளில் தாமாக காளான்களை சேகரித்து உண்போர் கவனமாக இருக்க வேண்டும். அவர்கள், விஷக் காளான்களை உண்டுவிடும் அபாயம் உண்டு.

Next Story