உடலுக்கு பொலிவு தருகிறதா.. பழரச பானம்?


உடலுக்கு பொலிவு தருகிறதா.. பழரச பானம்?
x
தினத்தந்தி 29 Dec 2017 11:15 PM GMT (Updated: 2017-12-28T13:33:50+05:30)

பழரச பானம் பருகினால் உடல் பொலிவு பெறும் என்ற கருத்தில் உண்மை இருக்கிறதா?

திருநெல்வேலியை சேர்ந்த மேரி ஆண்டனி, திராட்சையில் தயாராகும் பழரசம் தயாரிப்பதில் கைதேர்ந்தவர். கடந்த 15 ஆண்டுகளாக வீட்டிலேயே பழரசம் தயாரித்து வருகிறார். “என்னுடைய பாட்டி கற்றுக்கொடுத்த ஒயின் எனப்படும் பழரசம் தயாரிக்கும் முறையை அதே கைப்பக்குவம் மாறாமல் தயார் செய்கிறேன். கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை ஒயின் இல்லாமல் கொண்டாட முடியாது” என்று உற்சாகமாக பேச ஆரம்பிக்கும் மேரியிடம் பழரசம் தயாரிப்பு சம்பந்தமான கேள்விகளை அடுக்கினோம். அவர் நிதானமாக பதிலளித்தார்.

* வீடுகளில் பழரசம் தயாரிக்கும் பழக்கம் எப்போது உருவானது?

“அரசர் காலத்திலிருந்தே வீடுகளில் பழரசம் தயாரித்து வருகிறார்கள். குறிப்பாக கிறிஸ்துவ நாடுகளிலும், கிறிஸ்துவ வீடுகளிலும் இதற்கு தனி மரியாதை உண்டு. இயேசு செய்த முதல் அதிசயம் திராட்சை ரசத்தில் தான் வெளிப்பட்டது. இன்று இயேசுவின் நினைவாக வழங்கப்படுவதும் திராட்சை ரசம் தான் என்பதால் கிறிஸ்துவ மக்கள் வீடுகளிலேயே தயாரிக்கிறார்கள். குறிப்பாக கோவா, கேரளாவில் இந்த கலாசாரம் அதிகமாக பரவி இருக்கிறது. கேரளாவில் நடக்கும் கிறிஸ்துவ திருமணங்களில் பழரசம் வழங்குவது கட்டாய சடங்காகவே மாறிவிட்டது. தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, சென்னை போன்ற மாவட்டங்களிலும் திருமண வைபவங்களில் இந்த கலாசாரம் பரவ ஆரம்பித்துவிட்டது”

* வீடுகளில் தயாரிக்க என்ன காரணம்?

“சுத்தமான திராட்சை ரசத்தை சுவைக்க, வீடுகளில் தான் தயாரிக்கவேண்டும். அப்போதுதான் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப பழரசத்தை உருவாக்க முடியும். ஏனெனில் பழரச தயாரிப்பில் ஏராள மான முறைகள் உள்ளன. குழந்தைகள் சுவைப்பதற்காக, இளைஞர்கள் ருசிப்பதற்காக, முதியவர்கள் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏற்றதாக அதன் கைப்பக்குவம் மாறுபடும். அதனால் அவரவர் களுக்கு ஏற்ற வகையை வீட்டிலேயே தயாரித்துவிடுகிறோம்”

* பழரசம் தயாரிப்பையும், அதனை அருந்துவதையும் பொதுமக்கள் எப்படி பார்க் கிறார்கள்?

“பலரது பார்வையில் போதை தரும் பானமாகவும், சிலரது பார்வையில் மருத்துவ குணம் நிறைந்த பழரசமாகவும் தெரிகிறது. உண்மையில்... இது மருத்துவ குணம் நிறைந்த பழரசம். அதில் ‘ஈஸ்ட்’ கலப்பதினால் மட்டுமே, அது போதை தரும் பானமாக மாறுகிறது”

* இதனை பருகினால் உடல் பொலிவு பெறும், உடல் நலத்திற்கு நன்மை தரும் போன்ற கருத்துகளில் உண்மை இருக்கிறதா?

“இத்தகைய கருத்துகளில் பாதி உண்மையும், பாதி கதையும் கலந்திருக்கிறது. போதை தரும் பொருட்கள் எதுவாகினும் அது உடல்நலத்திற்கு கெடுதலையே உண்டாக்கும். ஆனால் வீட்டிலேயே தயாரிக்கப்படும் பழரசம் விஷயத்தில் கொஞ்சம் உண்மையும் இருக்கிறது. ஈஸ்ட் கலக்காத அல்லது ஈஸ்ட் மிகக்குறைந்த அளவில் கலந்திருக்கும் திராட்சை ரசத்தை தொடர்ந்து குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதை அறிவியல் ரீதியாகவும் நிரூபித்திருக் கிறார்கள்.

உடல் பொலிவு விஷயத்தில் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் ஒயினை குடிப்பதுடன், உடலில் தேய்த்து கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அதனால் உடல் பொலிவு பெறுகிறது என்பது அந்நாட்டு மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது”

* குழந்தைகள், முதியவருக்கும்கொடுக்கலாமா..?

“ஈஸ்ட் கலக்காத, அதாவது போதை தரும் பொருட்கள் இல்லாத திராட்சை ரசத்தை கொடுக்கலாம். சில மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்திக்காக திராட்சை ரசத்தை பரிந்துரைக்கிறார்கள். முதியவர்களுக்கு என சர்க்கரை இல்லாத ரகங்களும் தயாராவதால், அவர்களும் பருகலாம்” என்றார்.

வீட்டிலேயே பிரத்யேகமாக பழரச தயாரிப்பில் அசத்தி வரும் மேரிக்கு அவரது கணவர் ஜோஸ் பிரகாஷ் ஆண்டனி உறுதுணையாக இருக்கிறார். பழரசம் சம்பந்தமான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஜோஸ், மேரி தயாரிக்கும் பழரசத்தின் சுவையை அதிகரித்து வருகிறார். இந்த தம்பதிக்கு ஜோமல் அன்ரே என்ற மகன் இருக்கிறார். 

Next Story