தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்ட 2 வாலிபர்கள் மூச்சுத்திணறி பலி


தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்ட 2 வாலிபர்கள் மூச்சுத்திணறி பலி
x
தினத்தந்தி 29 Dec 2017 10:45 PM GMT (Updated: 2017-12-30T01:10:17+05:30)

கேளிக்கை விடுதியில் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்ட 2 வாலிபர்கள் மூச்சுத்திணறி பலியானது தெரியவந்துள்ளது.

மும்பை,

மும்பை லோயர் பரேலில் கேளிக்கை விடுதி உள்ளது. இந்த விடுதியில் அதே பகுதியை சேர்ந்த குஷ்பு பன்சாலி என்ற பெண்ணின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அவரது உறவினர்கள், நண்பர்கள் என 250–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில், அவரது நண்பர்களான விஷ்வா(வயது23), தைர்யா(26) ஆகிய 2 பேர் கலந்து கொண்டனர்.

இவர்கள் விழா நடந்து கொண்டிருந்த போது நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தனர். இந்தநிலையில் விடுதியில் நேற்று அதிகாலை 12.30 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். உயிரை காப்பாற்றி கொள்ள பலர் அங்குள்ள கழிவறைகள், ‘லிப்ட்’ போன்ற இடங்களில் தஞ்சம் அடைந்தனர். மற்றவர்கள் தப்பிக்க வழி தெரியாமல் கேளிக்கை விடுதிக்குள் அங்கும் இங்கும் ஓடினர்.

அப்போது வெளியே சென்றிருந்த தைரியா மற்றும் விஸ்வா தகவல் அறிந்தவுடன் அங்கு விரைந்து வந்தனர். விடுதி அருகே அவர்கள் செல்லும் முன் அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து இருந்தது.

இதனால் அவர்கள் தங்கள் முகத்தில் துணியால் கவசம் அணிந்த நிலையில் விடுதிக்குள் புகுந்து அங்கு தடுமாறி கொண்டிருந்த சிலரை காப்பாற்றி வெளியேற்றினர். ஆனால் வெகுநேரமாக உள்ளே இருந்ததால் அவர்களால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் அங்கேயே மயங்கி விழுந்தனர்.

தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு மயங்கி கிடந்த 35 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், பல பேரின் உயிரை காப்பாற்றிய தைரியா மற்றும் விஸ்வா லாலனி ஆகியோர் மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது.


Next Story