வைகுண்ட ஏகாதசி விழா பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு


வைகுண்ட ஏகாதசி விழா பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
x
தினத்தந்தி 29 Dec 2017 11:15 PM GMT (Updated: 29 Dec 2017 7:52 PM GMT)

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆரணி பஸ் நிறுத்தம் அருகே ஆதிலட்சுமி சமேத ஆதிகேசவபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதாசியையொட்டி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது.

இதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சாமி திருவீதி உலா நடந்தது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பூதேவி, ஸ்ரீதேவியுடன் அலங்கார கோலத்தில் பெருமாள் காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு அடுத்த சிங்க பெருமாள்கோவிலில் உள்ள புகழ்பெற்ற பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் மனோகரன். செயல் அலுவலர் வெங்கடேசன், மேலாளர் சிவபிரகாசம் ஆகியோர் செய்திருந்தனர்.

இது போல செங்கல்பட்டு ஹைரோட்டில் உள்ள வேதாந்த தேசிகர் பெருமாள்கோவிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ராகவனார் தெருவில் உள்ள கோதண்டராமர் கோவிலிலும் அதிகாலை நடைதிறக்கப்பட்டு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மீஞ்சூரை அடுத்த தேவதானம் கிராமத்தில் ரங்கநாயகி சமேத ரங்கநாதபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ரங்கநாதபெருமாள் காட்சி அளித்தார். இந்த விழாவில் பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன், ஆர்.டி.ஓ. முத்துசாமி, தாசில்தார் சுமதி, முன்னாள் கவுன்சிலர் நாகராஜ், கோவில் அறங்காவலர் கோபி உள்பட ஏராளமான பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேவதானம் ஊராட்சி மக்கள் செய்திருந்தனர்.

காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற அஷ்டபுஜம் பெருமாள் கோவிலில் அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. உற்சவர் அஷ்டபுஜம் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் தியாகராஜன், செயல் அலுவலர் குமரன், மேலாளர் ரகு ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதேபோல் பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலிலும் அதிகலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சு.ராமகிருஷ்ணன் மற்றும் கோவில் அர்ச்சகர் செய்திருந்தனர்.


Next Story