கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நடிகர் சுதீப் போட்டி?


கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நடிகர் சுதீப் போட்டி?
x
தினத்தந்தி 29 Dec 2017 11:10 PM GMT (Updated: 2017-12-30T04:40:01+05:30)

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நடிகர் சுதீப் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2018) ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கி விட்டனர். கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பரிவர்த்தனா யாத்திரை (மாற்றத்திற்கான பயணம்) என்ற பெயரில் பயணத்தை கடந்த நவம்பர் 2–ந் தேதி பெங்களூருவில் தொடங்கினார். தொகுதி வாரியாக அவர் சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

எடியூரப்பா ஜனவரி 28–ந் தேதி பெங்களூருவில் இந்த பயணத்தை நிறைவு செய்கிறார். முதல்–மந்திரி சித்தராமையா கடந்த மாதம் 13–ந் தேதி பீதரில் தனது பயணத்தை தொடங்கி தொகுதி வாரியாக சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறார். அதே போல் ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவர் குமாரசாமி ‘குமாரபர்வ‘ என்ற பெயரில் பயணத்தை தொடங்கி பிரசாரம் செய்து வருகிறார். இதனால் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே கர்நாடக சட்டசபை தேர்தல் களம் சுறுசுறுப்பாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்தராமையாவை பெங்களூருவில் உள்ள அவருடைய வீட்டில் பிரபல நடிகர் சுதீப் நேரில் சந்தித்து பேசினார். மறைந்த நடிகர் விஷ்ணுவர்தனுக்கு நினைவு மண்டபத்தை விரைவாக கட்ட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அத்துடன் கர்நாடக அரசியல் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது. அப்போது காங்கிரசில் வந்து சேருமாறும், சட்டசபை தேர்தலில் போட்டியிடுமாறும் சுதீப்பிடம் சித்தராமையா கூறியதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சுதீப்புக்கு சித்ரதுர்கா மாவட்டத்தில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர். இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள மொலகால்மரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சுதீப் களம் இறங்குவதாக கூறப்படுகிறது. அந்த தொகுதியில் நாயக் சமூகத்திற்கு சுமார் 1 லட்சம் ஓட்டுகள் இருக்கிறது. அதே சமூகத்தை சேர்ந்த சுதீப் அங்கு போட்டியிட்டால் அவர் எளிதாக வெற்றி பெற முடியும் என்று சித்தராமையா கணக்கு போடுகிறார். இந்த தகவலை நடிகர் சுதீப் இதுவரை மறுக்கவும் இல்லை. அதேவேளையில் அந்த தகவலை அவர் உறுதி செய்யவும் இல்லை.

கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் நடிகர் சுதீப் தமிழில் ‘நான் ஈ‘ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். நடிகர் விஜய் நடித்த ‘புலி‘ படத்திலும் சுதீப் நடித்து இருக்கிறார். தற்போது அவர் ஒரு ஹாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Next Story