உயிர்ப் போராட்டத்தில் வென்ற அதிசயக் குழந்தை!


உயிர்ப் போராட்டத்தில் வென்ற அதிசயக் குழந்தை!
x
தினத்தந்தி 30 Dec 2017 6:25 AM GMT (Updated: 30 Dec 2017 6:25 AM GMT)

பிறக்கும்போது உள்ளங்கை அளவே இருந்த அதிசயக் குழந்தை, ஒரு பெரும் உயிர்ப் போராட்டத்துக்குப் பின், சந்தோஷமான கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி முடித்திருக்கிறது.

ங்கள் முதல் குழந்தையைப் பெற்றெடுக்கும் நேரம்தான் எந்த ஒரு பெற்றோருக்கும் மிகவும் மகிழ்வும் நெகிழ்வுமான தருணம்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெரேமி- லெஸ்லீ தம்பதி அப்படி ஓர் ஆனந்தத் தருணத்தைத்தான் எதிர்நோக்கிக் காத்திருந்தனர்.

ஆனால் அடைந்ததோ, அதிர்ச்சி. இரட்டைக் குழந்தையைச் சுமந்திருந்த லெஸ்லீக்கு 22 வாரத்திலேயே அதாவது கடந்த ஆண்டு நவம்பர் 20-ம் தேதியே ஆண் குழந்தை பிறந்துவிட்டது. உடன் பிறந்த பெண் குழந்தை இறந்துவிட்டது.

வெறும் 455 கிராம் எடையுடன் உள்ளங்கைக்குள் அடங்கக்கூடியதாக இருந்த ஆண் குழந்தைக்கு கிரேசன் பார்னெட் எனப் பெயரிட்டனர். ஆனால் அந்தக் குழந்தை உயிர்பிழைத்து வாழ்வது கடினம் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

ஏற்கனவே பெண் குழந்தையை இழந்த சோகத்தில் இருந்த ஜெரேமி- லெஸ்லீ தம்பதிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஆனால் பிறந்த ஆண் குழந்தையை காப்பாற்ற வேண்டிய சூழலில், தீவிர சிகிச்சைப் பிரிவின் இன்குபெட்டரில் வைத்து வளர்த்தனர்.

மிக மெலிதான தோல், சின்னஞ்சிறு உறுப்புகளுடன் சிறு பொம்மை போல இருந்த கிரேசன் பத்திரமாக பாதுகாக்கப்பட்டான். இப்படி பிறந்து ஓராண்டைக் கடந்த நிலையில் தற்போது அவன் ஓரளவு தேறிவிட்டான். கடந்த வாரம் தனது பெற்றோருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையையும் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறான்.

கடந்து சென்ற ஒவ்வொரு நாளும் மிகவும் கடினமாக இருந்ததாகக் கூறும் ஜெரேமி, தற்போது தங்கள் மகன் பிழைத்துவிட்டதால் தாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்கிறார்.

குட்டிப்பையன் கிரேசன் நூறாண்டு காலம் வாழட்டும்! 

Next Story