அழிவின் விளிம்பில் நிற்கும் சுமத்ரா காண்டாமிருகம்


அழிவின் விளிம்பில் நிற்கும் சுமத்ரா காண்டாமிருகம்
x
தினத்தந்தி 30 Dec 2017 7:24 AM GMT (Updated: 30 Dec 2017 7:24 AM GMT)

சுமத்ரா வகை காண்டாமிருகங்களின் இனம் தற்போது அழிவின் நூலிழையில் உள்ளது.

ரிய வகை சுமத்ரா காண்டாமிருக இனம், அழிவின் விளிம்பில் நிற்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இந்த வகை காண்டாமிருகத்தின் மரபணுவை பகுப்பாய்வு செய்ததன் மூலம் பல விஷயங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர்.

பகுப்பாய்வு செய்யப்பட்ட மரபணு வரைபடம், நீண்டகாலத்துக்கு முன்பே இவ்வகை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் காட்டுகிறது.

பனி யுகத்தில் காண்டாமிருகங்களின் வசிப்பிடம் சுருங்கியபோது அவற்றின் பிரச்சினைகளும் தொடங்கியதாக இதுதொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க குழுவினர் கூறுகின்றனர்.

தொடர்ந்துவந்த காலத்தில், மனித சமூகம் ஏற்படுத்திய அழுத்தத்தின் காரணமாக இவ்வகை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை மேலும் குறையத் தொடங்கியது. தற்போது உலகில் 250-க்கும் குறைவான சுமத்ரா வகை காண்டாமிருகங்களே எஞ்சியிருப்பதாகக் கூறப்படுகிறது.

“இந்தக் காண்டாமிருகங்களின் அழிவு மிக நீண்ட காலத்துக்கு முன்பே தொடங்கியது” என்று சின்சினாட்டி மிருகக்காட்சி மற்றும் தாவரவியல் பூங்காவின் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டெர்ரி ரோத் கூறுகிறார்.

மரபணு வரிசை தகவல்களின்படி, பிளாய்டோசீன் காலம்தான் சுமத்ரா காண்டாமிருகங்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது என்று அமெரிக்கா மேற்கு வர்ஜீனியாவில் உள்ள மார்ஷல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் ஹெர்மன் மேஸ் கூறுகிறார்.

உலகின் கடைசி பனி யுகமான பிளாய்டோசீன் என்ற புவியியல் காலம், 25 லட்சம் முதல் 11 ஆயிரம் ஆண்டு காலத்துக்கு முன்பு நிலவியது.

சின்சினாட்டி மிருகக்காட்சி சாலையில் உள்ள ஒரு நன்கு அறியப்பட்ட ஆண் காண்டாமிருகம் மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்டு அதன் மரபணு வரிசைப்படுத்தப்பட்டு ஆராய்ச்சியாளர்களால் பகுப்பாய்வு செய்யப்பட்டது.

‘இப்பு’ என்று அழைக்கப்படும் இந்தக் காண்டாமிருகம் 1990 முதல் இப்பூங்காவில் வாழ்ந்து வந்தது. ஆனால், நான்கு வருடங்களுக்கு முன் தனது 33-வது வயதில் உயிரிழந்தது. உலகிலுள்ள சுமத்ரா காண்டாமிருகங்களிலேயே அதிகபட்சமாக மூன்று குட்டிகளை ஈன்றது இதுதான். இந்த காண்டாமிருகத்தின் மரபணு, மரபணு வங்கியில் சேமிக்கப்பட்டது.

இதன் டி.என்.ஏ.வை பகுப்பாய்வு செய்ததன் மூலம் சுமத்ரா வகை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை சார்ந்த வரலாற்றை விஞ்ஞானிகளால் அறிய முடி கிறது.

சுமார் 9 லட்சத்து 50 ஆயிரம் வருடங் களுக்கு முன்பு இவ்வகை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 60 ஆயிரம் ஆனது.

மற்ற பெரியவகை பாலூட்டிகளைப் போலவே சுமத்ரா வகை காண்டாமிருகங் களின் இனமும் சுமார் 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது பிளாய்டோசீன் காலத்தின் முடிவில் தனக்குப் பொருத்தமான வசிப்பிடங்களை இழந்தது.

போர்னியோ, ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை மலாய் தீபகற்பம் மற்றும் ஆசியப் பெருநிலப்பரப்புடன் இணைக்கும் நிலப் பகுதிகள் கடலினுள்ளே காணாமல் போயின.

ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்னர் பருவநிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக இந்த காண்டாமிருகங் களின் எண்ணிக்கை சரியத் தொடங்கியது.

“அப்போது குறைந்த இவற்றின் எண்ணிக்கை அதன் பிறகு மீள்வதற்கான சூழலே ஏற்படவில்லை” என்று பேராசிரியர் மேஸ் கூறுகிறார்.

“சுமத்ரா வகை காண்டாமிருகங்களின் இனம் தற்போது அழிவின் நூலிழையில் உள்ளது. அவற்றைக் காத்திட நாம் மேலும் செயலாற்ற வேண்டும்” என்று ரோத் சொல்கிறார்.

சம்பந்தப்பட்ட பகுதி அரசுகள் இதில் கவனம் வைக்க வேண்டும்! 

Next Story