குடிநீர் பிரச்சினையை தீர்க்க மணிமுத்தாறு அணையில் இருந்து 4–வது ரீச்சுக்கு தண்ணீர் வழங்கவேண்டும் கலெக்டரிடம் மனு


குடிநீர் பிரச்சினையை தீர்க்க மணிமுத்தாறு அணையில் இருந்து 4–வது ரீச்சுக்கு தண்ணீர் வழங்கவேண்டும்  கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 30 Dec 2017 8:30 PM GMT (Updated: 2017-12-30T19:21:01+05:30)

குடிநீர் பிரச்சினையை தீர்க்க மணிமுத்தாறு அணையில் இருந்து சிறப்பு அனுமதியின் மூலம் 4–வது ரீச்சுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

நெல்லை,

குடிநீர் பிரச்சினையை தீர்க்க மணிமுத்தாறு அணையில் இருந்து சிறப்பு அனுமதியின் மூலம் 4–வது ரீச்சுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கிராம மக்கள் கலெக்டரிடம் மனு

திசையன்விளை பகுதி கிராம மக்கள் ராதாபுரம் எம்.எல்.ஏ. இன்பத்துரை தலைமையில், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள் ராஜன்(கரைத்சுத்து உவரி), ரவீந்திரன்(ஆனைக்குடி) மற்றும் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல்ராஜா, இளைஞர் அணி செயலாளர் முருகேசன், வள்ளியூர் நகர செயலாளர் தவசிமுத்து, அச்சம்பாடு பாலகிருஷ்ணன் நாடார், முத்து நாடார், தவசிமுத்து, இடைச்சிவிளை ராஜதுரை, ரத்தினவேல், அரசூர்பூச்சிக்காடு பாண்டியன் என்ற தேவசகாயம், முருகேசன் ஆகியோர் முன்னிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் சந்தீப்நந்தூரியை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட திசையன்விளை, முதுமொத்தான்மொழி, கரைச்சுத்து புதூர், நல்லவடி, அப்புவிளை, இடையன்குடி, உவரி, குட்டம், அரசூர் ஆகிய பகுதிகளில் உள்ள 100–க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் உள்ள குடிநீர் உப்பாக மாறிவருகிறது. இந்த தண்ணீரை குடிக்கின்ற மக்கள் பலர் நோயால் அவதிப்படுகிறார்கள்.

சிறப்பு அனுமதி

எனவே இந்த பகுதிகளில் உள்ள குளங்கள் நிரம்பினால் குடிநீரில் உள்ள உப்பு தன்மை மாறும். மேலும் குடிநீர் பிரச்சினையும் தீர்க்கப்படும். மணிமுத்தாறு அணையில் தற்போது 113 அடி தண்ணீர் உள்ளது. இந்த அணையில் இருந்து 4–வது ரீச்சில் உள்ள 10 வது குரூப் வழியாக சுவிசே‌ஷபுரம், மகாதேவன்குளம், புதுக்குளம், நந்தன்குளம், எருமைகுளம், சுவிக்கால்குளம், மேலப்படுகை(அயன்குளம்), கீழப்படுகை(ஆனைக்குடி), இடையன்குடி, இலங்குளம், கடகுளம் ஆகிய குளங்களுக்கு நேரடியாக தண்ணீர் கொடுத்தால் அந்த பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்.

இந்த குளங்களுக்கு தண்ணீர் வழங்க சிறப்பு அனுமதி வழங்க வேண்டும். கடந்த 1989–90–ம் ஆண்டுகளில் இந்த குளங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு சிறப்பு அனுமதி அளித்து தண்ணீர் விடப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டும் சிறப்பு அனுமதி வழங்கி அந்த குளங்களுக்கு தண்ணீர் வழங்கவேண்டும். இதன் மூலம் அந்த பகுதியில் உள்ள குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.


Next Story