அனுமதி பெறாமல் விளம்பர பலகை வைத்தால் சிறை தண்டனை கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை


அனுமதி பெறாமல் விளம்பர பலகை வைத்தால் சிறை தண்டனை கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை
x
தினத்தந்தி 30 Dec 2017 9:00 PM GMT (Updated: 30 Dec 2017 2:27 PM GMT)

அனுமதி பெறாமல் விளம்பர பலகை வைத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை,

அனுமதி பெறாமல் விளம்பர பலகை வைத்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

விளம்பர பலகைகள்

நெல்லை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகரசபை மற்றும் டவுன் பஞ்சாயத்து பொது இடங்கள் மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களில் டிஜிட்டல் பேனர்கள், விளம்பர பலகைகள் அமைக்க வேண்டும் என்றால் அதற்கான விண்ணப்ப படிவத்தில் உரிய கட்டணம் செலுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற்ற பின்னரே விளம்பர பலகைகள் வைக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடம் என்றால், சம்பந்தப்பட்ட ஆணையாளர், செயல் அலுவலரிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்தவிதமான பாதிப்பு ஏற்படாது என அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் இருந்து ஆட்சேபனையின்மை சான்று பெற வேண்டும்.

சிறை தண்டனை

மாநகராட்சி பகுதியில் ஒரு விளம்பர பலகைக்கு கட்டணம் ரூ.200 எனவும், நகரசபை பகுதிக்கு ரூ.100 எனவும், டவுன் பஞ்சாயத்துக்கு ரூ.50 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பேனருக்கு ரூ.50 முன்பணம் செலுத்த வேண்டும். 6 நாட்களுக்கு மட்டுமே விளம்பர பலகை வைக்க அனுமதி வழங்கப்படும்.

விளம்பர பலகையின் அடிப்பகுதியில் மாவட்ட கலெக்டரின் ஆணை எண் விவரம் போன்றவை குறிப்பிடப்பட வேண்டும். மாவட்ட கலெக்டரிடன் அனுமதி பெறாமல் விளம்பர பலகை வைக்கப்பட்டால் ஓர் ஆண்டு சிறைத்தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story