மானாமதுரை பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 20 மாட்டு வண்டிகள் பறிமுதல்


மானாமதுரை பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 20 மாட்டு வண்டிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Dec 2017 9:45 PM GMT (Updated: 30 Dec 2017 6:13 PM GMT)

மானாமதுரை பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 20 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

மானாமதுரை,

மானாமதுரை வட்டாரத்தில் கால்பிரவு, ராஜகம்பீரம், முத்தனேந்தல், சிறுகுடி, கள்ளர்வலசை, செய்களத்தூர், கல்குறிச்சி, வேதியரேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் 100–க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி இரவு முழுவதும் வைகை ஆற்றில் மணல் அள்ளப்படுகிறது. இதுகுறித்த தகவலின்பேரில் சிவகங்கை மாவட்ட பறக்கும் படை துணை தாசில்தார் பாலகிருஷ்ணன், மண்டல தாசில்தார் சேகர் தலைமையிலான வருவாய்த்துறை குழு மானாமதுரையை அடுத்த கள்ளர்வலசை பகுதியில் அதிரடி சோதனை நடத்தியது. இதில் அனுமதியின்றி மணல் அள்ளிய 9 மாட்டு வண்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து சிப்காட் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதேபோன்று மானாமதுரை நகரை ஒட்டியுள்ள பகுதியில் சோதனை நடத்தி மணல் அள்ளிய 11 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து மானாமதுரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

வருவாய்த்துறையினர் கூறுகையில், சட்டவிரோதமாக கள்ளர்வலசை, செய்களத்தூர், கல்குறிச்சி பகுதிகளில் அதிக அளவு ஆற்று மணல் அள்ளப்படுகிறது. இதனை தடுக்க சோதனை நடத்தி மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளோம், சிவகங்கை கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரைத்து உள்ளோம் என்றனர்.

இந்தநிலையில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுபவர்களை டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் என்று நினைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை தொகுதியில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் அதிகமாக உள்ளனர். தகுதிநீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை எம்.எல்.ஏ. மாரியப்பன்கென்னடி, தினகரன் ஆதரவாளராக உள்ளார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் பலரும் மாரியப்பன்கென்னடிக்கு ஆதரவாக உள்ளனர். இதனை தடுக்க அதிகாரிகள் மூலம் ஆளுங்கட்சி நடவடிக்கை எடுப்பதாக குற்றம் சாட்டு வைக்கப்படுகிறது. மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் பல பகுதிகளில் மணல் அள்ளி சட்டவிரோதமாக விற்பனை செய்தாலும், மாரியப்பன்கென்னடியின் ஆதரவாளர்கள் என்று நினைத்து கொண்டு மானாமதுரை பகுதியில் மட்டும் அதிகாரிகள் சோதனை நடத்தி மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் எல்லா பகுதிகளிலும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.


Next Story