தேசிய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் மாநில தலைவர் சி.என்.ராஜா பேட்டி


தேசிய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் மாநில தலைவர் சி.என்.ராஜா பேட்டி
x
தினத்தந்தி 30 Dec 2017 10:00 PM GMT (Updated: 30 Dec 2017 6:59 PM GMT)

தேசிய மருத்துவ ஆணையத்தை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சி.என்.ராஜா கூறினார்.

ஈரோடு,

இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தேர்வு தலைவர் சி.என்.ராஜா நேற்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தாக்கல் செய்துள்ளார். இது மக்கள் விரோத ஆபத்தான மற்றும் மருத்துவ சுகாதார பணிகளை கடுமையாக பாதிக்கக்கூடிய மசோதா ஆகும். இந்த மசோதா மூலம் மக்களின் அடிப்படை மருத்துவ பணி, மருத்துவ சேவை, குடும்பநல மற்றும் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப்படும்.

குடும்பநல மற்றும் மருத்துவ சேவை தற்போது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மசோதா மூலம் மத்திய அரசு தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உள்ளது. மேலும் இந்த மசோதா மூலம், இந்திய மருத்துவ கவுன்சில் ஒழிக்கப்பட்டு, மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பேர் கொண்ட தேசிய மருத்துவ ஆணைய குழு அமைக்கப்படுகிறது. இதில் 5 டாக்டர்கள் மட்டுமே பகுதிநேர அங்கத்தினராக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதி, டாக்டர்கள் அல்லாத 20 பேர் மத்திய அரசால் நியமிக்கப்படுகின்றனர்.

60 உறுப்பினர்களை கொண்ட மருத்துவ ஆலோசனை குழுமம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த 60 பேரும் மத்திய அரசால் நியமிக்கப்படுகின்றனர். மருத்துவ குழு பராமரிப்பிற்காக 4 குழுமம் அமைக்கப்பட்டு, ஒவ்வொன்றிலும் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்களும் மத்திய அரசால் நியமிக்கப்படுகின்றனர். இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

இந்த குழு தேசத்தின் மருத்துவம் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளையும் கண்காணிக்க இயலாது. அலோபதி டாக்டர்கள் அல்லாத பிற மருத்துவ பிரிவுகளை சேர்ந்த ஹோமியோபதி, சித்தா, யுனானி, ஆயுர்வேதம் போன்ற டாக்டர்களும் இந்த தேசிய மருத்துவ கவுன்சிலில் இடம் பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

6 மாத பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மருத்துவம் படிக்காத டாக்டர்கள் அலோபதி சிகிச்சை முறைகளை மேற்கொள்ளவும், போலி டாக்டர்களுக்கு அரசே அங்கீகாரம் கொடுப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. முறையாக மருத்துவ தேர்ச்சி மற்றும் பயிற்று டாக்டர்களுக்கு மீண்டும் ஒருமுறை தேர்வு எழுதி வெற்றிபெற்ற பின்னரே தேசிய மருத்துவ ஆணையத்தில் பதிவு செய்ய முடியும் என்ற அம்சம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இதனால் பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். தனியார் மருத்துவ கல்லூரிகள் எந்தவித தர நிர்ணயமின்றி தாங்களாகவே மருத்துவ படிப்பு, மருத்துவ மேற்படிப்பு ஆகியவற்றை அதிகரித்துக்கொள்ள வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

தனியார் கல்லூரிகளுக்கு 15 சதவீதம், அரசுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு இருந்த நிலையில், இந்த மசோதா மூலம் தற்போது 40 சதவீதம் இட ஒதுக்கீடு அரசுக்கும், மீதமுள்ள 60 சதவீதம் இடங்களை தனியார் கல்லூரிகளே நிரப்பிக்கொள்ளலாம். இதன் மூலம் தரமற்ற மருத்துவ கல்வி, டாக்டர்கள் உருவாக நேரிடும். புதிய தனியார் மருத்துவ கல்லூரிகள் கடுமையான சட்ட திட்டங்களுக்கு உட்படுத்தப்படாமல் ஆரம்பிக்க தேசிய மருத்துவ ஆணையத்துக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டு உள்ளது.

எனவே இந்த மக்கள் விரோத மசோதா தொடர்பாக விவாதிக்க இந்திய மருத்துவ கழகத்தின் தேசிய மாநாடு மும்பையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் தேசிய மருத்துவ ஆணையத்தை முழுமையாக எதிர்ப்பது என்றும், அதற்காக நாடு தழுவிய போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். அவருடன் டாக்டர்கள் சுகுமார், அபுல்ஹசன், தங்கவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story