சேவூர் அருகே மோட்டார் சைக்கிள்–லாரி மோதல்; இளம்பெண் பலி


சேவூர் அருகே மோட்டார் சைக்கிள்–லாரி மோதல்; இளம்பெண் பலி
x
தினத்தந்தி 30 Dec 2017 9:30 PM GMT (Updated: 2017-12-31T00:51:46+05:30)

சேவூர் அருகே மோட்டார் சைக்கிள்–லாரி மோதிய விபத்தில் இளம்பெண் பலியானார். கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்து விட்டது.

சேவூர்,

திருப்பூர் அருகே உள்ள வெள்ளிரவெளி கிழக்கு வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 48). இவருடைய மகன் பால்ராஜ் (23). மகள்கள் (இரட்டை சகோதரிகள்) ராஜேஸ்வரி (22) மற்றும் காளீஸ்வரி (22).

இந்த நிலையில் சேவூர் அருகே தாளக்கரையில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் பால்ராஜ், ராஜேஸ்வரி மற்றும் காளீஸ்வரி ஆகியோர் நேற்று சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு அதே மோட்டார் சைக்கிளில் 3 பேரும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை பால்ராஜ் ஓட்டினார். அவருக்கு பின்னால் ராஜேஸ்வரியும், அதற்கு பின்னால் காளீஸ்வரியும் அமர்ந்து இருந்தனர்.

சேவூர் கருமாபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் கார் ஒன்று கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரை முந்தி செல்ல பால்ராஜ் முயன்று, மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி உள்ளார். அப்போது எதிரே அவினாசியில் இருந்து சேவூர் நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த காளீஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார். பால்ராஜிக்கும், ராஜேஸ்வரிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் உள்ளவர்கள் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்துபற்றிய தகவல் அறிந்ததும் சேவூர் போலீசார் விரைந்து சென்று காளீஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பியபோது, அண்ணன் கண் முன்னே தங்கை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story