கனகன் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவு


கனகன் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும் அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவு
x
தினத்தந்தி 30 Dec 2017 10:30 PM GMT (Updated: 2017-12-31T01:20:20+05:30)

கனகன் ஏரியை சுற்றுலாதலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு பகுதியாக சென்று கவர்னர் கிரண்பெடி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று காலை வழுதாவூர் சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள கனகன் ஏரிக்கு சென்றார். இதற்காக கவர்னர் மாளிகையில் இருந்து சைக்கிளில் அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் கவர்னர் மாளிகை அதிகாரிகள் சென்றனர்.

அங்கு தன்னார்வல தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களுடன் மாணவர்கள் சிலர் இணைந்து கைகளால் ஏரியை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கவர்னர் கிரண்பெடி கையால் சுத்தம் செய்வதை தடுத்து நிறுத்தினார். பின்னர் மாணவர்களின் செயல்களை பாராட்டிய அவர் பாதுகாப்பு இல்லாமல் பணிகளை செய்யக்கூடாது என்று அறிவுரை கூறினார்.

எப்போதும் சுத்தம் செய்வதற்கு எந்திரங்களைத் தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, மனிதர்களை பயன்படுத்தக்கூடாது. பொதுப்பணித்துறை செயலாளர் அன்பரசுவிடம் கிரண்பெடி வலியுறுத்தினார். இதை உடனடியாக அனைத்து துறை அதிகாரிகளுடனும் கலந்து பேசி அமல்படுத்துவதாக உறுதியளித்தார்.

தொடர்ந்து, இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து வரும் கழிவுகளை கழிவுநீர் வாய்க்காலுடன் இணைக்க பொதுப்பணித்துறை செயலருக்கு உத்தரவிட்டார். ஏரியைச் சுற்றியுள்ள நடைபாதையில் உள்ள புதர்களை அகற்றி வேலி அமைக்க வேண்டும், ஏரியை தூய்மையாக மாற்ற வேண்டும், சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும், இரவு நேரங்களில் இந்த பகுதியில் மதுகுடிப்பவர்களை தடுக்க போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டார்.

வனத்துறையும், சுற்றுலாத்துறையும் இணைந்து கனகன் ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், இங்கு வருகிற பிப்ரவரி மாதத்தில் படகு போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அடுத்த வாரம் ஆய்வு பணியின் போது நான் இங்கு வருவேன், அப்போது தற்போது உள்ளதைவிட சிறப்பாக இருப்பதை காண விரும்புகின்றேன் என்று தெரிவித்தார்.

பின்னர் அந்த பகுதியை சேர்ந்த நலவாழ்வு சங்க நிர்வாகிகளை அழைத்து கனகன் ஏரியை பாதுகாப்போம் என்ற பெயரில் வாட்ஸ் அப் குழுவை ஆரம்பித்து கனகன் ஏரியை பாதுகாப்பாக வைத்திருங்கள் என்று கவர்னர் கிரண்பெடி ஆலோசனை வழங்கினார். இதன்பின் அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.


Next Story