அன்றாட பிரச்சினைகளை தீர்த்து வைக்க கவர்னர் மாளிகை மக்கள் மன்றமாக விளங்குகிறது ;கவர்னர் கிரண்பெடி


அன்றாட பிரச்சினைகளை தீர்த்து வைக்க கவர்னர் மாளிகை மக்கள் மன்றமாக விளங்குகிறது ;கவர்னர் கிரண்பெடி
x
தினத்தந்தி 30 Dec 2017 10:45 PM GMT (Updated: 30 Dec 2017 7:50 PM GMT)

பொதுமக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்த்து வைக்க கவர்னர் மாளிகை மக்கள் மன்றமாக விளங்குகிறது என்று கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி,

கவர்னர் மாளிகை மூலம் 2017–ம் ஆண்டு 1108 கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன. இவை கட்டுமானப்பணிகள், நிதி ஒப்புதல், செலவினங்கள், நலத்திட்டங்கள், நியமன விதிகள், பணி நியமனங்கள், பணிமாற்றம், பதவி உயர்வு, ஒழுங்கு நடவடிக்கைகள், அரசின் கொள்கை முடிவுகள் தொடர்பான வி‌ஷயங்களை உள்ளடக்கிய கோப்புகள் ஆகும்.

பொதுவான கொள்கை எதுவென்றால் அது நிதி சிக்கனம், நீதி, ஒருமைப்பாடு, வெளிப்படையான நிர்வாகம், நம்பகத்தன்மை மற்றும் ஒரு சார்பின்மை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். ஊழல் அநீதியை எந்தக் காரணத்தைக் கொண்டும் கவர்னர் மாளிகை அனுமதிக்காது. பல பிரச்சினைகளை சான்றுகளுடன் சி.பி.ஐ. மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு மையத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விவசாயத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு தண்ணீர் பற்றாக்குறை, ஏரி, குளங்கள், நீர்நிலைகளை தூர்வார சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. தினமும் கவர்னர் மாளிகையில் அதிகாரிகள் குழு கூடி அன்றைய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும். கவர்னர் அலுவலகம் ஒருங்கிணைக்கும் அலுவலமாக செல்பட்டு வந்துள்ளது. பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் அலுவலகமாக கவர்னர் மாளிகை இருந்துள்ளது. பொதுமக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்த்து வைக்க கவர்னர் மாளிகை மக்கள் மன்றமாக விளங்குகிறது.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.

மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள கருத்துப் பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியிருப்பதாவது:–

புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி என் மீது தெரிவித்த குற்றச்சாட்டை படிக்கும்போது மிகுந்த ஆர்வமாக படிக்கத் தூண்டுகிறது. தனது எண்ணத்தை வெளிப்படையாக தெரிவித்ததற்காக முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடைய கடிதங்களுக்கு பதில் அளித்ததின் மூலம் அவரிடம் நான் என்ன அறிவுறுத்தினேன்? நான் ஏன் கள ஆய்வுக்கு சென்று தவறுகளை திருத்துகிறேன்? நான் ஏன் மக்களை சந்திக்க விரும்புகிறேன்? கவர்னர் மாளிகை, மக்கள் மாளிகையாக மாறியது எப்படி? ஏன் நிதி விவேகத்தை வலியுறுத்துகிறோம்? திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கு முன்பே அதற்கான நிதி இருப்பு தொடர்பாக நிதித்துறை செயலரிடம் ஏன் அனுமதி பெற வேண்டும்? சென்டாக் விவகாரத்தில் சி.பி.ஐ. ஏன் வழக்குப்பதிவு செய்தது? ஒரு சில குறிப்பிட்ட அமைச்சர்களின் கடல் கடந்த பயணத்தை தடுத்து நிறுத்தியது ஏன்? ஏற்கனவே பணியாற்றிய தலைமை செயலாளர், கவர்னரின் கடிதங்களுக்கு பதில் அளிக்காமல் காலதாமதம் செய்தது ஏன்? அவர் ஏன் நீண்ட நாட்களாக கோப்புகளை தேக்கி வைத்திருந்தார்? இந்த கேள்விகளுக்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

மிகுந்த பொறுப்புடன் எனது கடமையைச் செய்வதற்காக புதுவையில் இருக்கிறேன். புதுச்சேரி மக்களுடைய நலன்களை பாதுகாக்க நான் தொடர்ந்து இதைச் செய்வேன். மக்களின் பணத்தை நேர்மையாக செலவழித்தாலே போதும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.


Next Story