ஆக்கிரமிப்பை அகற்றி கடைமடைக்கு தண்ணீர் கேட்டு சப்–கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை


ஆக்கிரமிப்பை அகற்றி கடைமடைக்கு தண்ணீர் கேட்டு சப்–கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 30 Dec 2017 10:15 PM GMT (Updated: 2017-12-31T01:51:02+05:30)

ஆக்கிரமிப்பை அகற்றி கடைமடைக்கு தண்ணீர் கேட்டு பொள்ளாச்சி சப்–கலெக்டர் தாலுகா அலுவலகத்திற்கு பூச்சி மருந்து, மண்எண்ணெய் கேனுடன் விவசாயிகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் இருந்து வேட்டைக்காரன்புதூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. தண்ணீர் 3 சுற்றுக்களாக பிரித்து வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பெரியபோது கிளை வாய்க்காலை ஒரு சிலர் அடைத்து, தங்களது தோட்டத்துக்கு மட்டும் தண்ணீர் பாய்ச்சுவதாக தெரிகிறது. இதனால் கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. எனவே கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், கடைமடைக்கு தண்ணீர் வழங்கக்கோரியும் பெரியபோது கிளை வாய்க்கால் மூலம் பயன்பெறும் விவசாயிகள் பொள்ளாச்சி சப்–கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து முற்றுகையிட்டனர். அப்போது சில விவசாயிகள் பூச்சி மருந்து பாட்டில் மற்றும் மண்எண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் சமரசம் ஏற்பட்டதால், அதை தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:–

ஆழியாறு அணையில் இருந்து நேற்று முன்தினம் வேட்டைக்காரன்புதூர் கால்வாயில் 2–வது சுற்று தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டது. இதில் பெரியபோது கிளை வாய்க்கால் மூலம் 36.3 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் தண்ணீர் செல்ல கூடிய ஒற்றை வாய்க்காலை ஒரு சிலர் அடைத்து ஆக்கிரமித்து உள்ளனர். மேலும் அவர்களது தோட்டத்திற்கு மட்டும் தண்ணீரை பாய்ச்சி கொள்கின்றனர்.

வாய்க்கால் அடைப்பை அகற்றுமாறு சப்–கலெக்டர் அறிவுறுத்தியும், வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் காயும் நிலையில் உள்ளது. இதனால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. மேலும் வாய்க்கால் அடைப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அகற்ற செல்லும் அதிகாரிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story