ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கும், பா.ஜனதாவுக்கும் மக்கள் தந்த பாடம்


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கும், பா.ஜனதாவுக்கும் மக்கள் தந்த பாடம்
x
தினத்தந்தி 30 Dec 2017 11:00 PM GMT (Updated: 2017-12-31T02:22:34+05:30)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு அ.தி.மு.க.வுக்கும், பா.ஜனதாவுக்கும் தமிழக மக்கள் தந்த பாடம் என்று தர்மபுரியில் தொல்.திருமாவளவன் கூறினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட எஸ்.சி.,எஸ்.டி. அரசு ஊழியர் சங்கம் சார்பில், போட்டித்தேர்வுகளை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு இலவச பயிற்சி அளிக்க அம்பேத்கர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டிட திறப்பு விழா தர்மபுரியில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் திராவிடர் கழகத்தை சேர்ந்த பேராசிரியர் அன்பழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகி அருணன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமா வளவன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சாதியவாதிகளோ, மதவாதிகளோ காலூன்ற இடம் தரமாட்டோம் என்பதை உணர்த்தும் வகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு அமைந்து உள்ளது. அ.தி.மு.க. பா.ஜ.க. ஆகிய கட்சிகளிடையே உள்ள உறவு அனைவரும் வெளிப்படையாக அறிந்த ஒன்று. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினாலும், அந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் விருப்பம்.

அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்வதன் மூலம் அ.தி.மு.க. தலைமையில் நடைபெறும் தமிழக ஆட்சியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்பதே மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் நோக்கம். ஆனால் அவர்களின் முழுமையான ஆசியோடு இடைத்தேர்தலில் நிறுத்தப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளரை மக்கள் ஏற்கவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு அ.தி.மு.க.விற்கு தமிழக மக்கள் தந்த பாடம் என்பதை விட பா.ஜ.க. உள்ளிட்ட மதவாத, சாதியவாத சக்திகளுக்கு மக்கள் தந்த பாடம் என்பதே சரியானது.

இடைத்தேர்தலின் அ.தி.மு.க.வின் தோல்வி மூலம் பா.ஜ.க.வின் சதி முறியடிக்கப்பட்டு உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் விருப்பப்படி செயல்படும் அ.தி.மு.க.வை வெற்றி பெற விடக்கூடாது என்ற அடிப்படையில் தி.மு.க.வை இடைத்தேர்தலில் நாங்கள் ஆதரித்தோம். மதவாத சக்திகளை தமிழகத்தில் வேரூன்ற விடக்கூடாது என்ற தி.மு.க. கூட்டணியின் நோக்கம் தார்மீக ரீதியாக நிறைவேறி உள்ளது. அந்த அடிப்படையில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story