ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்க கோரி பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு


ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்க கோரி பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Dec 2017 10:45 PM GMT (Updated: 2017-12-31T02:22:40+05:30)

காவிரி, அமராவதி ஆற்றில் மணல் அள்ள அனுமதிக்க கோரி அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்கு மாட்டுவண்டி தொழிலாளர்கள் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் மணல் அள்ள மதுரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் மணல் அள்ளப்படுவதில்லை. அமராவதி ஆற்றில் அரசின் அனுமதியோடு மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளி விற்று வந்தனர்.

இந்த நிலையில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணலை லாரிகளுக்கு விற்பனை செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் மணல் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றில் மாட்டுவண்டியில் மணல் அள்ள கடந்த நவம்பர் மாதம் 14-ந் தேதி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த தடையால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் அமராவதி ஆற்றில் மணல் அள்ள முடியவில்லை.

வாழ்வாதாரம் பாதிப்பு

மணல் தட்டுப்பாட்டின் காரணமாக உள்ளூரில் கட்டுமான தொழில் பெருமளவு முடங்கி உள்ளது. மாட்டு வண்டி தொழிலாளர்களும் வேலை இன்றி தவித்து வருகின்றனர். தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாடுகளுக்கு தீவனம் வாங்கி போட முடியவில்லை எனவும், அதனால் காவிரி, அமராவதி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்திலும் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மேலும் கோரிக்கை தொடர்பாக ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம் நடத்தி உள்ளனர். காவிரி, அமராவதி ஆற்றில் மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

300-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்

இந்த நிலையில் 22 கிராமத்தை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்களை கரூர் நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகைக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று அழைத்திருந்தார். இதையடுத்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை பயணியர் மாளிகைக்கு திரண்டு வந்தனர். பயணியர் மாளிகை முன்பு அனைவரும் குவிந்திருந்தனர். இதையடுத்து பாதுகாப்பு பணிக்காக துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிருத்விராஜ், சந்திரசேகர் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.

அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வந்ததும் குறிப்பிட்ட நபர்களை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அறையின் உள்ளே அழைத்தார். அப்போது அங்கிருந்த அனைத்து மாட்டுவண்டி தொழிலாளர்களும் அறையின் உள்ளே செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தி முக்கியமான நபர்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர். சிலர் வெளியே தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

கோர்ட்டில் வழக்கு தொடர...

பேச்சுவார்த்தை முடிந்ததும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் அனைவரும் வெளியே வந்தனர். பேச்சுவார்த்தை குறித்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், “மணல் விவகாரம் தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு உள்ளது. இந்த வழக்கு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வருகிறது. மாட்டு வண்டி தொழிலாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு சங்கமாக உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சங்கம் மூலம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கேட்க கூறப்பட்டுள்ளது. மேலும் அமராவதி ஆற்றில் உள்ளூர் தேவைக்காக மணல் அள்ள அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார். அதன்பின் மாட்டு வண்டி தொழிலாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story