போலி ஆவணம் மூலம் களிமண் கடத்தல்; டிப்பர் லாரிகள் பறிமுதல் 2 பேர் கைது


போலி ஆவணம் மூலம் களிமண் கடத்தல்; டிப்பர் லாரிகள் பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 30 Dec 2017 10:15 PM GMT (Updated: 30 Dec 2017 9:16 PM GMT)

குமாரபாளையம் அருகே போலி ஆவணம் மூலம் களிமண் கடத்திய டிப்பர் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

குமாரபாளையம்,

குமாரபாளையம் பகுதியில் போலி ஆவணம் மூலம் களிமண் டிப்பர் லாரிகளில் கடத்தப்படுவதாக நாமக்கல் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. உடனே தனி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், ஜீப் டிரைவர் தமிழ்செல்வன் என்பவருடன், குமாரபாளையம் அருகே உள்ள பல்லக்காபாளையம் தனியார் பொறியியல் கல்லூரி அருகே வாகன சோனையில் ஈடுபட்டார்.

அப்போது அந்த வழியாக 2 டிப்பர் லாரிகள் வந்தன. அதில் களிமண் லோடு இருந்தது. விசாரித்ததில் கர்நாடகா மாநிலம், மாலூர் என்ற பகுதியில் இருந்து களிமண் ஏற்றிக்கொண்டு, கேரளா மாநிலம் சாலக்குடியில் உள்ள டைல்ஸ் கம்பெனிக்கு கொண்டு செல்வதாக லாரி டிரைவர்கள் கூறினார்கள்.

ஆனால், லாரிகளில் இருந்த ‘பெர்மிட்’ ஆவணத்தில் நாமக்கல் அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியில் இருந்து களிமண் எடுத்து வந்ததாக இருந்தது. எனவே போலி ஆவணத்தை பயன்படுத்தி களிமண் கடத்தியதாக அந்த 2 டிப்பர் லாரிகளை தனி வருவாய் ஆய்வாளர் பறிமுதல் செய்து குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

மேலும் இது தொடர்பாக குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலி ஆவணம் மூலம் களிமண் கடத்தலில் ஈடுபட்டதாக டிப்பர் லாரி டிரைவர்களான, கேரளா மாநிலம், திருச்சூர் பகுதியை சேர்ந்த அசோக்குமார்(வயது 27) நாமக்கல் செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்த முருகவேல்(46) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக, மைசூரை சேர்ந்த மோகன் என்கிற மோகன்ராஜ் மற்றும் பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story