பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி சாலை மறியல் 5 பெண்கள் உள்பட 55 பேர் கைது


பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி சாலை மறியல் 5 பெண்கள் உள்பட 55 பேர் கைது
x
தினத்தந்தி 30 Dec 2017 11:00 PM GMT (Updated: 2017-12-31T03:00:21+05:30)

வாய்மேடு அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பெண்கள் உள்பட 55 பேரை போலீசார் கைது செய்தனர்.

வாய்மேடு,

2016-2017-ம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்காததை கண்டித்தும், உடனே வழங்க வலியுறுத்தியும், பயிர் காப்பீட்டுத்தொகை வழங்க கால தாமதம் செய்யும் காப்பீட்டு நிறுவன அதிகாரிகளை கண்டித்தும் நாகை மாவட்டம் வாய்மேட்டை அடுத்த மருதூர் கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணை செயலாளர் நாராயணன், ஒன்றிய செயலாளர் சிவகுருபாண்டியன் ஆகியோர் தலைமை தாங்கினர். நிர்வாக குழு உறுப்பினர்கள் அருள்ஒளி, பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணையன், வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

55 பேர் கைது

அப்போது கடந்த 2016-2017-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக சம்பா பயிர்கள் முற்றிலும் கருகி சேதமடைந்தது. அதைதொடர்ந்து அப்போது பயிர் காப்பீடு செய்த அனைவருக்கும் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு இதுவரை பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.

பயிர்க்காப்பீடு வழங்கக்கோரி கடந்த 27-ந்தேதி சாலை மறியல் நடத்த முயன்றபோது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி 2 நாட்களில் தீர்வு காணப்படும் என்று கூறினர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம். எனவே சாலை மறியலை கைவிடும்படி போலீசார் கூறினர். ஆனால் இதற்கு உடன்படாமல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 55 பேரை கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் தங்க வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story