திருமுல்லைவாயலில் வாலிபரை காரில் கடத்திய வழக்கில் 4 பேர் கைது


திருமுல்லைவாயலில் வாலிபரை காரில் கடத்திய வழக்கில் 4 பேர் கைது
x
தினத்தந்தி 31 Dec 2017 12:02 AM GMT (Updated: 31 Dec 2017 12:01 AM GMT)

திருமுல்லைவாயலில் வாலிபரை காரில் கடத்திய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். முன் விரோதம் காரணமாக ரவுடியை பழிவாங்க அவரது உறவினரை கொலை செய்ய காரில் கடத்தியது விசாரணையில் தெரிந்தது.

ஆவடி,

சென்னை டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்(வயது 19). இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் திருமுல்லைவாயல் பகுதியில் நடந்து சென்ற போது, காரில் வந்த மர்ம நபர்கள் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச்சென்றனர்.

இது குறித்த புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் மர்ம நபர்களை விரட்டிச்சென்றனர். போலீசார் தங்களை விரட்டி வருவதை அறிந்த கடத்தல் கும்பல், ஆகாஷை திருநின்றவூர் அருகே காரில் இருந்து கீழே தள்ளிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இது தொடர்பாக அம்பத்தூர் துணை கமி‌ஷனர் சர்வேஷ்ராஜ் உத்தரவின் பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் ஆவடி சரக உதவி கமி‌ஷனர் நந்தகுமார் தலைமையில் திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராம் மற்றும் ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் பூங்கா பகுதியில் கடத்தல் கும்பல் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து இன்ஸ்பெக்டர் சீத்தாராம் தலைமையிலான தனிப்படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்த 4 பேரை பிடித்து திருமுல்லைவாயல் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், சென்னை டி.பி.சத்திரம் கே.வி.என்.புரம் 2–வது தெருவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி(41), அம்பத்தூர் வெங்கடேஸ்வரா நகரைச்சேர்ந்த விஜயகுமார் (29), டி.பி.சத்திரம் 3–வது தெருவைச்சேர்ந்த கோகுலன்(30), சென்னை செனாய் நகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (23) என்பது தெரிந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான தட்சிணாமூர்த்தி கூட்டாளிகளுக்கும், சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணாநகரைச் சேர்ந்த கூலிப்படை தலைவனான ரவுடி ராதா என்ற ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக ராதாகிருஷ்ணனை பழிவாங்க அவரது உறவினரான ஆகாஷை கொலை செய்ய திட்டமிட்டு அவரை காரில் கடத்தியது தெரிந்தது.

இதையடுத்து கைதான 4 பேரையும் நேற்று மாலை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.

இவர்கள் 4 பேர் மீதும் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து கார் மற்றும் 4 கத்திகள், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.



Next Story