பரவிய பாலியல் விழிப்புணர்வு


பரவிய பாலியல் விழிப்புணர்வு
x
தினத்தந்தி 31 Dec 2017 6:51 AM GMT (Updated: 2017-12-31T12:21:20+05:30)

பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப் படுவதும், பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப் படுவதும், பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவற்றிற்கு எதிராக பெண்களுக்கான அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றன. எனினும் தங்கள் உரிமைக்காகவும், பாலியல் வன்முறைக்கு எதிராகவும் 2017-ம் ஆண்டில் பெண்கள் நடத்திய போராட்டம் உலகை அதிரவைத்தது.

பெண்களின் பாலியல் பிரச்சினையை மையப்படுத்தி விவாதிக்கும் விதமாக ‘மீடூ’என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. அதில் ஆண்களால் ஏதாவதொரு வகையில் பாலியல் ரீதியாக பாதிப்புக்குள்ளான பெண்கள் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை பதிவிட்டார்கள்.

அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது நடிகைகள் உள்பட 10-க் கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் குற்றச்சாட்டு களை முன்வைக்க, ஹாலிவுட் நடிகையான அலிஸ்ஸா மிலானோ, ஹார்வி மீதான புகாரை மையமாக வைத்து ‘மீடூ’ என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டார். அதில், ‘பாலியல் ரீதியான தொந்தரவுக்கோ, தாக்குதலுக்கோ உள்ளான அனைத்து பெண்களும் ‘மீடூ’ என்று பதிவிட்டால், எத்தனைப் பெண்கள் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மை தெரியவரும். அதன் மூலம் இப்பிரச்சினையின் வீரியத்தை மக்களுக்கு உணர வைக்கலாம்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த ஹேஷ்டேக் இணைய உலகை பரபரப்பாக இயங்கவைத்துவிட்டது. பல்வேறு தரப்பினரும் பாலியல் ரீதியாக தாங்கள் சந்தித்த கொடுமைகளை பகிர ஆரம்பித்தார்கள். அதில் பிரபல நடிகைகளும் அடக்கம். ‘மீடூ’ ஹேஷ்டேக் உலகம் முழுவதும் பிரபலம் ஆனதை பார்த்து ஆண்களும் தங்கள் கருத்தை அதில் பதிவிட்டார்கள்.

ஒருசில ஆண்கள், தாங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டார்கள். ஒருசிலர் எதிர் மறையான விமர்சனங்களையும் முன்வைத்தார்கள். எனினும் இந்த ஹேஷ்டேக் பெண்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்திவிட்டது. தன்னை போலவே இத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களே, தன்னை விடவும் மோசமான வகையில் பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கிறார்களே என்பதை அறிந்து அதிர்ந்து போனார்கள். அதோடு இந்த பிரச்சினையை பற்றி வெளியே சொல்லும் தைரியமும், விழிப்புணர்வும் பெண்கள் மத்தியில் உருவானது.

‘மீடூ’வை முதன் முதலில் ஆரம்பித்தவர் டரானா ப்ரூக்கி என்ற பெண்மணி. சமூக வலைதளங்கள் பிரபலமடையாத 2007-ம் ஆண்டே ‘மீடூ’ ஹேஷ்டேக்கை உருவாக்கி தனது கருத்துக்களை பதிவு செய்திருந்தார். ‘‘பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பித்த நான், என்னை போலவே பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களோடு என்னை இணைத்துக் கொள்வதற்காக, நானும் உங்களை போலவேதான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதற்காக ‘மீடூ’ என்று வார்த்தையை பதிவிட்டேன். அது இத்தனை ஆண்டுகள் கழித்து இவ்வளவு வைரலானது, பலரையும் பேச வைத்தது, விவாதிக்க வைத்தது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார், டரானா.

அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக பெண்கள் நடத்திய போராட்டமும் உலகின் கவனத்தை ஈர்த்தது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின்போது டிரம்ப் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். எனினும் அவர் பதவி ஏற்ற நாளில் ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டம் உலக அளவிலும் பரவி டிரம்ப் மீதான எதிர்ப்பை வலுப்படுத்தியது. அமெரிக்காவில் சிகாகோ தெருக்களில் நடந்த பேரணியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உலக நாடுகளில் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Next Story