அன்று: குழந்தை தொழிலாளர் இன்று: நல்லாசிரியர்


அன்று: குழந்தை தொழிலாளர் இன்று: நல்லாசிரியர்
x
தினத்தந்தி 31 Dec 2017 8:58 AM GMT (Updated: 2017-12-31T14:28:22+05:30)

“வறுமைதான் எனக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்தது. வறுமை எப்படி என்னை வாட்டினாலும் மனம் தளர்ந்து போகக் கூடாது என்று அதோடு போராடினேன்.

“வறுமைதான் எனக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்தது. வறுமை எப்படி என்னை வாட்டினாலும் மனம் தளர்ந்து போகக் கூடாது என்று அதோடு போராடினேன். மாதம் 30 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டு, 14 வயதில் வேலை பார்த்துக்கொண்டே படித்தேன். வறுமை தந்த அந்த கல்விதான் என்னை பேச்சாளராக்கியது. நல்லாசிரியராக்கி, முனைவராகவும் உருவாக்கியிருக்கிறது” என்று பெருமிதமாக சொல்கிறார், முனைவர் ஆரூர் எஸ்.சுந்தரராமன். வயது 49.

இவர் திருவாரூரை சேர்ந்தவர். பெற்றோர்: சேதுராமன்- அலமேலு. பிளஸ்-டூ படித்துவிட்டு சென்னை வந்த சுந்தரராமன் ஆடிட்டர் ஒருவரிடம் வேலைபார்த்துக்கொண்டே பி.ஏ. தமிழ் இலக்கியம் படித் திருக்கிறார். பின்பு தொடர்ந்து முதுநிலை கல்வி பயின்று, பள்ளி ஆசிரியர் ஆகியிருக்கிறார். தற்போது பிரபல பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராக பணியாற்றுகிறார். இவர் நகைச்சுவையோடு மாணவர்களுக்கு தமிழ் இலக்கணத்தை போதிப்பதில் சிறப்பு பெற்று விளங்குகிறார். ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட மேடை சொற்பொழிவுகளில் பங்கேற்றிருக்கிறார். ஆன்மிக பேச்சாளராகவும் திகழ்கிறார். தனது மாணவர் களுக்கு பேச்சாற்றல் பற்றியும் கற்றுக்கொடுக்கிறார்.

முனைவர் சுந்தரராமன் தனது வாழ்க்கை பயணத்தை பற்றி விளக்குகிறார்:

“வறுமையில் இருந்து நான் கற்ற வாழ்க்கைப் பாடங்கள் பலரையும் சென்றடையவேண்டும் என்ற எண்ணம் என்னை மேடைகளில் பேசத் தூண்டியது. ஒன்பதாம் வகுப்பு படித்தபோது அந்த ஆசையை என் நண்பர்களிடம் கூறினேன். அவர்கள், ‘பேசாமல் படிக்கிற வேலையைப் பாரு..’ என்றார்கள். எனது வகுப்பாசிரியர் சி.சி.ஜெ.ராஜன் என்பவர்தான், ‘உன்னால் முடியும்.. போய் பேசு..’ என்று மேடை ஏற்றிவிட்டார். நான் கற்றதையும், வாழ்க்கை மூலம் பெற்றதையும் கலந்து அன்று மேடையில் பேசினேன். நான் மனப்பாடம் செய்யாமல் சுயமாக சூழ்நிலைக்கு தக்கபடி பேசியது எனக்கு பாராட்டுகளை வாங்கித்தந்தது. அன்றிலிருந்து தனிப்பேச்சு, இலக்கியம், ஆன்மிகம், அறிவிப்பாளர், ஒலிப் புத்தக வாசிப்பாளர் போன்ற பலவகையான பேச்சுப் பணிகளில் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

இன்றைய மாணவர்கள் நன்றாக படிக்கிறார்கள். பரீட்சை எழுதி, நல்ல மதிப்பெண்ணும் பெறுகிறார்கள். ஆனால் பொதுஇடங்களில் நான்கு பேருக்கு மத்தியில் நின்று பேசத் தயங்குகிறார்கள். பேச்சாற்றல் என்பது ஒரு அற்புதமான கலை. அதை வளர்த்துக்கொண்டால் மேடையில் கூச்சமின்றி நமது கருத்தை சிறப்பாக அனைவருக்கும் புரியும் விதத்தில் எடுத்துச்சொல்லலாம். அது அவர்களுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அளித்து எதிர்காலத்தில் அவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

மேடைப் பேச்சில் மாணவர்கள் சிறந்து விளங்கும்போது சமயோசிதமாக பேசும் ஆற்றல் அவர்களிடம் உருவாகும். அதற்கு ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டாக சொல்ல விரும்பு கிறேன். ஒரு மாணவியின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடக்க இருந்தது. நான் அறிவிப்பாளராக மேடையில் நின்றிருந்தேன். அந்த பெண் மேடையில் ஏறி வரும்போது திடீரென்று மின்தடை ஏற்பட்டுவிட்டது. அரங்கத்தில் இருந்தவர்களுக்கு அது ஒரு மாதிரியாகிவிட, சில நிமிடங்களில் மின்சாரம் வந்தது. சோர்ந்து போயிருந்த பார்வையாளர்களை பார்த்து நான், ‘இருளுக்கும் இவர் நடனம் காண ஆசை வந்தது.. பார்த்தது.. சென்றது..’ என்றேன். உடனே அரங்கம் முழுக்க கரவொலி எழுந்தது. மாணவியின் முகத்திலும் உற்சாகம். நிகழ்ச்சி நன்றாக களைகட்டியது. இப்படி சூழலுக்குத் தக்கபடி பேசும் ஆற்றல், மேடைப் பேச்சாளர்களுக்கு வந்துவிடும்..” என்கிறார்.

சுந்தரராமன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, இவருக்கு பாடம் நடத்திய தமிழாசிரியர்களின் கம்பீரத்தை பார்த்து இவருக்கும் தமிழாசிரியர் ஆகவேண்டும் என்ற ஆசை உருவாகியிருக்கிறது. அந்த ஆசையை நோக்கி அடியெடுத்துவைத்த இவர், தமிழாசிரியராகவும் ஆகிவிட்டார். தமிழ் இலக்கணத்தை இவர் வித்தியாசமான முறையில் கற்பிக்கிறார். அது பற்றி கேட்டபோது..

“தமிழ் இலக்கணத்தை நடைமுறை வாழ்க்கையோடு இணைத்து கற்றுக்கொடுத்தால் மாணவர்கள் ரசித்து அதை கேட்பார்கள். ‘தொழிற்பெயர்’ என்று இலக்கணமாகச் சொல்லாமல், ‘நீ செய்யும் செயல்கள்’ என அதனை எடுத்துக்கூறி, அவைதான் ‘விழித்தல்- எழுதல்- குளித்தல்- நடத்தல்’ என அவர்கள் செயல்கள் மூலமே விளக்கினால், மாணவர் களுக்கு எளிதாகப் புரியும். நடைமுறையுடன் இணைக்காமல் இருப்பதால் சில மாணவர்களுக்கு இலக்கணம் பிடிப்பதில்லை. ‘இன்பம் துன்பம் இலக்கணமே.. அன்பாய் கற்கின் அரைக்கணமே’ என்ற முனைப்புடன் கற்றலும், கற்பித்தலும் நடைபெறுமானால் மாணவர்கள் இலக்கணத்தை விரும்பிப் படிப்பார்கள். நமது தாய் மொழி வளரும்..” என்கிறார். புதிய பாடத்திட்டக் குழுவிலும் இவர் இடம் பெற்றிருந்தார். அரிமா சங்கம் இவரது தமிழ்ப் பணிகளை பாராட்டி நல்லாசிரியர் விருது வழங்கியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமிடம் இருந்து பாராட்டும், பரிசும் பெற்றுள்ளார்.

சுந்தரராமன் சென்னை பல்கலைக்கழகத்தில் ‘பாரதியின் மொழி பெயர்ப்புகள் ஓர் ஆய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். ஆன்மிக மேடைகளில் பேசி வரும் இவர் பெரியபுராணம், திருவிளையாடல் புராணம், திருவாசகம் போன்றவைகளை காட்சி உரையாக வழங்கி வருகிறார்.

Next Story