கெட்டி மேளம் முழங்க தமிழர் முறைப்படி திருமணம் செய்து கொண்ட ‘ஜப்பான் தம்பதி’ ‘‘கனவு நிறைவேறியது’’ என பெருமிதம்
கெட்டி மேளம் முழங்க தமிழர் முறைப்படி, ஜப்பான் தம்பதியர் மதுரையில் திருமணம் செய்து கொண்டனர். கனவு நிறைவேறியது என அவர்கள் பெருமிதத்துடன் கூறினர்.
மதுரை,
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வசிப்பவர் கெய்ஜி ஒபாதா. இவருடைய மனைவி நஓமி ஒபாதா. இவர்களுடைய மகள் சிஹாரு (வயது26). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் மொழியியல் துறையில் மேற்படிப்பு படித்த போது, ஜப்பான் மொழி– தமிழ் மொழி இடையே உள்ள ஒற்றுமைகள் குறித்து ஆராய்ச்சி செய்தார்.
இதற்காக சிஹாரு, கடந்த 2014–ம் ஆண்டு சென்னை, மதுரை, சிதம்பரம், புதுச்சேரி வந்து தமிழ் மொழி குறித்து அறிந்து கொண்டார். இது தவிர டோக்கியோவில் உள்ள மதுரையை சேர்ந்த தோழி வினோதினியிடம் தமிழ் பயின்று வந்தார்.
தமிழ் மொழி மீதான ஆர்வத்தால் சிஹாரு, ஒரு கட்டத்தில் தமிழ் மொழியை முழுமையாக பேசவும், எழுதவும் கற்றுக் கொண்டார். மேலும் தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாற்றையும் தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் கொண்டார். குறிப்பாக அவருக்கு தமிழர்களின் திருமண முறைகள், உடைகள் மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள் மிகவும் பிடித்துப் போயின. எனவே தானும் தமிழர் கலாசாரப்படி திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் சிஹாருவுக்கும், அவருடைய காதலர் பேராசிரியர் யூடோவிற்கும் ஜப்பானில் பதிவுத் திருமணம் நடந்தது. ஆனால் சிஹாருவுக்கு தமிழர் முறையிலான திருமணம் மீதான ஆசை மட்டும் மறையவில்லை. இது குறித்து தனது கணவர் யூடோவிடம் தெரிவித்தார். அவரும், இதற்கு சம்மதம் தெரிவித்து தமிழர் கலாசார முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். அதன்படி இவர்களது திருமணம், தோழி வினோதினி மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் ஏற்பாட்டின் பேரில் மதுரையில் உள்ள ஓட்டலில் நேற்று நடந்தது.
இதற்காக மணமகள் சிஹாரு பட்டுச் சேலை அணிந்து அழைத்து வரப்பட்டார். அவருக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. தொடர்ந்து வேட்டி–சட்டையுடன் மணமகன் யூடோ, மேள தாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். பின்னர், தமிழர் முறைப்படி சம்பிரதாயங்கள் நடந்தன. தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் மாலை மாற்றிக் கொண்டனர். அதன்பின் கெட்டி மேளம் முழுங்க சிஹாருவுக்கு, யூடோ தாலி கட்டினார்.
இந்த திருமணத்தில் சிஹாருவின் தந்தை கெய்ஜி ஒபாதா, தாய் நஓமி ஒபாதா, சுவிட்சர்லாந்து தோழி ஆங்டூ லீ, யூடோவின் சகோதரர்கள் டுன்சிஷ்டோ, சியாக்கா ஆகியோர் வந்திருந்தனர். இவர்கள் வேட்டி–சட்டை, சேலை அணிந்திருந்தனர். இவர்கள் தவிர, ஜப்பானில் வசிக்கும் சிஹாருவின் தோழி அஸ்வினி, அவருடைய கணவர் இர்பான், கோவையை சேர்ந்த வேலவன் ஆகியோரும் வந்திருந்தனர்.
திருமணம் முடிந்தவுடன் சிஹாரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, ‘‘தமிழர் முறைப்படி திருமணம் நடக்க வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறி உள்ளது. தமிழ் மொழி மட்டுமல்ல, அதன் தொன்மை–கலாசாரம், உணவு வகைகள், உடைகள் போன்ற அனைத்தும் எனக்கு பிடிக்கும். சேலை கட்டி, பூ வைப்பது எனக்கு பிடித்தமான ஒன்று” என்றார்.
தந்தை கெய்ஜி ஒபாதா கூறும் போது, ‘‘3 ஆண்டுகளுக்கு முன்பே எனது மகள் சிஹாரு தமிழர் முறைப்படி தான் திருமணம் செய்வேன் என்று கூறினார். அப்படி என்ன இருக்கிறது அந்த கலாசாரத்தில் என்று சிஹாருவிடம் எதிர் கேள்வி கேட்டேன். ஆனால் இன்று கண்கூடாக பார்த்து வியந்து போய் விட்டேன். நானும் எனது மனைவியும் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறோம்‘‘ என்றார்.
தோழி அஸ்வினி கூறும் போது, ‘‘ஜப்பானில் தான் சிஹாரு எனக்கு அறிமுகம் ஆனார். அங்கு தமிழர்களின் அனைத்து இல்ல நிகழ்ச்சிகளிலும் சிஹாரு ஆர்வத்துடன் கலந்து கொள்வார். அவரது தமிழ் ஆர்வம் எங்களை வியக்க வைத்திருக்கிறது. கடந்த வாரம் சென்னையில் நடந்த எனது திருமணத்திற்கு வந்து சிகாஹாரு கலந்து கொண்டு வாழ்த்தினார். அப்போது அவர், மதுரையில் நடக்கும் எனது திருமணத்திற்கு நீங்கள் வர வேண்டும் என்று தமிழில் அச்சிடப்பட்ட பத்திரிகையை கொடுத்தார். தூய தமிழில் பேசுவதிலும், எழுதுவதிலும் சிஹாரு கெட்டிக்காரர்” என்றார்.
தோழி ஆங்டூ லீ கூறும் போது, ‘‘ஆஸ்திரேலியாவில் பிறந்த நான் தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் இருக்கிறேன். நான் ஆஸ்திரேலியாவில் சிஹாருவை சந்தித்த போது தோழிகள் ஆனோம். எனக்கு மதுரையில் திருமணம் நடக்கிறது, நீ கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று சிஹாரு கூறினார். பத்திரிகையும் அனுப்பினார். எனவே இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக அங்கிருந்து வந்திருக்கிறேன். இந்த திருமண சடங்குகள் மிகவும் வித்தியாசமாக உள்ளன. சேலை கட்டியதால் நான் மிகவும் அழகாகி விட்டதாக உணருகிறேன். இந்த திருமண விழாவில் கலந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.