கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் சுப.உதயகுமார் பேட்டி


கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் சுப.உதயகுமார் பேட்டி
x
தினத்தந்தி 31 Dec 2017 11:00 PM GMT (Updated: 31 Dec 2017 8:39 PM GMT)

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று சுப.உதயகுமார் கூறினார்.

நெல்லை,

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் 2 அலகுகள் கட்டுவதிலும், இயக்குவதிலும் நிதி மேலாண்மையை இந்திய அணுமின் கழகம் சரிவர செய்து இருக்கிறதா? என்று இந்திய கணக்கு தணிக்கை குழு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், 2001-ம் ஆண்டு ரூ.13 ஆயிரத்து 171 கோடி செலவாகும் என்று கூறப்பட்டு உள்ளது. பின்னர் இந்த திட்டத்துக்கு 2013-ம் ஆண்டு ரூ.17 ஆயிரத்து 270 கோடி செலவானது என்று கூறப்பட்டு உள்ளது. 2014-ம் ஆண்டு ரூ.22 ஆயிரத்து 462 கோடி செலவு செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

வெளிநாட்டு கம்பெனிகளுக்கு தேவையில்லாமல் சலுகைகள் காட்டப்பட்டு உள்ளது. மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் விதிமுறையை மீறி ஒரு வங்கியில் ரூ.1,000 கோடி இந்திய அணுமின் கழகம் கடன் பெற்றுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பதிலும், பராமரிப்பதிலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து இருக்கிறது, இந்த உலை ஆபத்தானது என இந்திய தணிக்கை குழு அறிக்கை கூறுகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையம் ஆபத்தானது என்று கூறி கடந்த 6 ஆண்டுகளாக நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். போராட்டம் செய்தவர்கள் மீது வழக்கு போட்டுள்ளனர். நாங்கள் கூறியதைத்தான் இந்திய தணிக்கை குழு அறிக்கையும் சொல்லி இருக்கிறது.

அதனால் கூடங்குளம் அணுஉலை போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும். ஊழலுக்கு காரணமான கூடங்குளம் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய தணிக்கை குழு அறிக்கையை தமிழில் மொழி பெயர்ப்பு செய்வோம். இந்த அறிக்கையில் கூறப்பட்ட விவரங்களை கிராமம், கிராமமாக சென்று பிரசாரம் செய்வோம். பின்னர் பெரிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து தணிக்கை குழு அறிக்கையை கொடுத்து ஆதரவு கேட்போம்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து இருக்கிறார். அவர் கொள்கை இல்லாதவர். தற்போது அரசியலுக்கு வருவேன் என்று அறிவித்து இருக்கிறார். கட்சியின் பெயர், சின்னத்தை பிறகு அறிவிப்பதாக கூறியுள்ளார். சட்டசபை தேர்தல் வரும்போது, கட்சியின் பெயர் அறிவித்து ஆட்சியை பிடிக்க நினைக்கிறார். இவர் தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கிறார்.

இதை ஒருபோதும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம். அவர் அரசியலுக்கு வந்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த நல்லதையும் செய்ய மாட்டார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story