அவினாசியில் வீடுகளுக்குள் புகுந்து பெண்களை அச்சுறுத்தும் குரங்கு கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
அவினாசியில் வீடுகளுக்குள் புகுந்து பெண்களை ஒரு குரங்கு அச்சுறுத்தி வருகிறது.இந்த குரங்கை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவினாசி,
திருப்பூர் மாவட்டம் அவினாசி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஒரு குரங்கு அவினாசியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உலாவருகிறது. அது அங்குள்ள வீடுகளுக்குள் சர்வ சாதாரணமாக புகுந்து சேட்டை செய்து வருகிறது.
இதனால் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக வாட்டசாட்டமாக உள்ள ஒரு குரங்கு அவினாசி பகுதியில் சுற்றி வருகிறது. வீட்டின் முன்கதவு திறந்து இருந்தால் சற்றும் தயங்காமல், அந்த குரங்கு வீட்டிற்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை தூக்கி வீசுகிறது.
மேலும் சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்கும் பெண்கள், சத்தம் கேட்டு வந்து பார்த்தால், குரங்கு அங்கிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்கள். அந்த குரங்கை துரத்தினால், கடிக்க மேலே பாய்கிறது. சத்தம் போட்டு, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குரங்கை விரட்டி வெளியேற்றி வருகிறார்கள். சிறுவயது குழந்தைகள் தின்பண்டங்களை வைத்திருந்தால், அதை பறித்துக்கொண்டு ஓடிவிடுகிறது.
கடைகளில் பொருட்கள் வாங்கி பைகளில் வைத்து கொண்டு வரும் பெண்களிடம், அவற்றை பின்புறமாக வந்து அந்த குரங்கு பறித்துக்கொண்டு ஓடி விடுகிறது. எனவே பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்திவரும் குரங்கை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.