பல்லடம் அருகே மின்கம்பத்தின் மீது வேன் மோதி கவிழ்ந்த விபத்தில் 18 பேர் படுகாயம்


பல்லடம் அருகே மின்கம்பத்தின் மீது வேன் மோதி கவிழ்ந்த விபத்தில் 18 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 31 Dec 2017 9:45 PM GMT (Updated: 2018-01-01T02:18:39+05:30)

பல்லடம் அருகே மின்கம்பத்தின் மீது வேன் மோதி கவிழ்ந்த விபத்தில் 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பொங்கலூர்,

திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அப்படையில் தொழிலாளர்கள் சுகாதார பணிகள் செய்து வருகிறார்கள். இவர்கள் நேற்று தங்களுடன் பணியாற்றும் சக தொழிலாளரின் உறவினர் ஒருவர் உடுமலையில் இறந்து விட்டதால் துக்கம் விசாரிக்க செல்ல முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று மதியம் சுகாதார பணியாளர்கள் 17 பேர் ஒரு வேனில் உடுமலை சென்றனர். வேனை திருப்பூரை சேர்ந்த செல்வக்குமார் (வயது 40) என்பவர் ஓட்டினார். வேன் பல்லடத்தை அடுத்து புள்ளியப்பம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதனால் மின் கம்பம் உடைந்து நொறுங்கியது. பின்னர் அருகே இருந்த மரத்தில் மோதி வேன் ஒருபுறமாக கவிழ்ந்தது.

இதனால் வேனுக்குள் இருந்தவர்கள் ‘‘ காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்’’ என்று கூச்சல் போட்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் வேனுக்குள் இருந்தவர்களை மீட்டனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் பல்லடம் போலீசாரும் விரைந்து சென்று காயம் அடைந்த மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் டிரைவர் செல்வக்குமார் மற்றும் வேனில் பயணம் செய்த திருப்பூரை சேர்ந்த ராதாமணி(50), கார்த்திக்(28), மற்றொரு செல்வக்குமார்(43), முத்துசாமி(45), சக்திவேல்(48), கார்த்திகா(21), செல்வி(31), மணிஷா(29), மல்லிகா(47), சக்திவேல்(31), கவுசல்யா(25), நத்தக்காடையூரை சேர்ந்த ஆறுமுகம்(48), காங்கேயத்தை சேர்ந்த தங்கமணி(37), கொடுவாயை சேர்ந்த லட்சுமி(47), குப்பம்மாள்(48), வேலம்பட்டிபுதூரை சேர்ந்த ராமாத்தாள்(52), சூலூரை சேர்ந்த துளசிமணி(39) ஆகிய 18 பேரும் படுகாயமடைந்தனர்.

இதில் கார்த்திகா, கவுசல்யா மற்றும் வேன் டிரைவர் செல்வக்குமார் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற அனைவரும் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேன் மோதியபோது மின்கம்பம் சாய்ந்ததும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story