கட்டிட தொழிலுக்கு தேவையான மணலை இறக்குமதி செய்ய வேண்டும் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்


கட்டிட தொழிலுக்கு தேவையான மணலை இறக்குமதி செய்ய வேண்டும் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 31 Dec 2017 10:45 PM GMT (Updated: 2018-01-01T02:28:45+05:30)

கட்டிட தொழிலுக்கு தேவையான மணலை இறக்குமதி செய்ய வேண்டும் என்று கட்டுமான தொழிலாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சி, கட்டுமான தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் விக்டர் வரவேற்றார். மகளிரணி மாவட்ட தலைவி செல்வி, மாவட்ட செயலாளர் பிரின்ஸ்ஜெபர்சன், மாவட்ட ஆலோசகர் முருகையன், அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாய தொழிலாளர் கட்சி, கட்டுமான தொழிலாளர் மத்திய சங்க தலைவரும், முன்னாள் வாரிய தலைவருமான பொன்குமார் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் புலம் பெயர்ந்து வேலைக்காக வெளிநாடு சென்று போலி முகவர்களை நம்பி வேலை இழந்து திரும்ப வரமுடியாமல் அங்கேயே தவிக்கும் நிலை உள்ளது. அவர்களின் சிரமங்களை தடுக்கும் வகையில் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட வெளிநாட்டு வாழ் தமிழர் நலவாரியத்தை அரசு உடனே செயல்படுத்த வேண்டும்.

விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். தமிழகத்தில் கட்டுமான தொழிலுக்கு தேவையான மணல் இல்லாததாலும், மணல் விலை ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. எனவே கட்டுமான தொழிலாளர்களுக்கு தேவையான மணலை இறக்கமதி செய்வதோடு, மணலுக்கு மாற்றாக உள்ள எம்.சாண்ட் மணல் உற்பத்திக்கு திட்டமிட்டு மணல் தேவையை உடனே பூர்த்தி செய்ய வேண்டும்.

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் உடலுழைப்பு தொழிலாளர்கள் ஓய்வூதியம் மனு கொடுத்து 3 ஆண்டுகளாயினும் நிதி கிடைக்காமல் உள்ளனர். அதே போல கல்வி நிதி கேட்டு மனு கொடுத்து 1 ஆண்டுக்கு மேல் நிதி கிடைக்கவில்லை. அதற்கு தேவையான நிதியை உடனே ஒதுக்க வேண்டும். நல வாரியத்தில் கட்டுமான தொழிலாளர்கள் பணியின் போது மரணம் அடைந்தால் ரூ.5 லட்சம் வழங்குவது போல் தொழிலாளி எங்கு எப்படி இறந்தாலும் ரூ.5 லட்சம் வழங்கவேண்டும். அதே போல உடலுழைப்பு தொழிலாளர்களுக்கும் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி அவர்களுக்கு ரூ.5 லட்சம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும். மழைகால நிவாரணமாக கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி மாவட்ட தலைவர் ஜோசப்பெஸ்கி நன்றி கூறினார்.


Next Story