டிரைவர் கொலை வழக்கு: கடலூரை சேர்ந்த 2 பேர் கைது


டிரைவர் கொலை வழக்கு: கடலூரை சேர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jan 2018 4:45 AM IST (Updated: 1 Jan 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் டிரைவர் கொலை வழக்கில் கடலூரை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசநல்லூரை சேர்ந்தவர் நைனாசெந்தில் (வயது50). டிரைவர். சொந்தமாக கார் வைத்து தொழில் நடத்தி வந்தார். கடந்த ஆண்டு (2017) அக்டோபர் மாதம் 30–ந் தேதி சென்னைக்கு சவாரி செல்ல வேண்டும் என கூறி நைனாசெந்திலை, 2 பேர் அழைத்து சென்றனர். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து உறவினர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர் கடலூர் அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன், ஏட்டுகள் சுரேஷ்குமார், ரமேஷ், ஜம்புலிங்கம் ஆகியோரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் கடலூர் மாவட்டம் வேப்பூர் காட்டுமயிலூர் மேற்குதெருவை சேர்ந்த சண்முகம்(34), அதே பகுதியை சேர்ந்த கனகராஜ்(22) ஆகிய 2 பேரும் சேர்ந்து நைனாசெந்திலை சவாரிக்கு அழைத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இவர்கள் 2 பேரும் பெல்ட்டால் நைனாசெந்திலை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு காரை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நேற்று 2 பேரையும் கைது செய்து, கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வெளிநாட்டில் வேலைக்கு சென்று வந்த சண்முகம் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததும், இதனால் கார்களை திருடி விற்க முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. நைனாசெந்திலிடம் இருந்த பயன்படுத்தாத சிம்கார்டை, 2 பேரும் எடுத்து பயன்படுத்தியதாகவும், இந்த சிம்கார்டு மூலமாக 2 பேரின் இருப்பிடத்தையும் கண்டறிந்ததாக போலீசார் கூறினர்.


Next Story