அரும்பார்த்தபுரத்தில் ரெயில்வேகேட்டை நிரந்தரமாக மூட பொதுமக்கள் எதிர்ப்பு ரெயிலை மறித்து திடீர் போராட்டம்


அரும்பார்த்தபுரத்தில் ரெயில்வேகேட்டை நிரந்தரமாக மூட பொதுமக்கள் எதிர்ப்பு ரெயிலை மறித்து திடீர் போராட்டம்
x
தினத்தந்தி 31 Dec 2017 11:00 PM GMT (Updated: 31 Dec 2017 9:07 PM GMT)

அரும்பார்த்தபுரத்தில் ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படுவதை எதிர்த்து பொதுமக்கள் ரெயிலை மறித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வில்லியனூர்,

புதுவை– விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அரும்பார்த்தபுரம் ரெயில்வே கேட் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ரெயில்வே கேட் மூடப்படும்போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் அங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மேம்பாலம் கட்டும்பணி தொடங்கி நடந்தது. இதையொட்டி மாற்றுப்பாதையில் தற்போது வாகனங்கள் சென்று வருகின்றன. ரெயில் வராத நேரங்களில் இந்த பாதையை அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூடப்பட உள்ளதாக அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ரெயில் சென்று வரும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எப்போதும் போல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் திரண்டு வந்து ரெயில்வே கேட் அருகே திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது காலை 10.30 மணியளவில் அந்த வழியாக புதுவையில் இருந்து விழுப்புரத்துக்கு சென்ற ரெயில் வந்தது. இதைப்பார்த்ததும் அந்த ரெயிலை மறிக்க தண்டவாளத்தில் பொதுமக்கள் திரண்டனர். இதைப்பார்த்ததும் ரெயிலை என்ஜின் டிரைவர் நிறுத்தினார். இதைத்தொடர்ந்து அந்த ரெயில் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலய்யன், சப்–இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ரெயில்வேகேட் மூடப்படும் விவகாரம் குறித்து ரெயில்வே நிர்வாகத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதை ஏற்று அவர்கள் கலைந்து சென்றனர்.


Next Story