விருத்தாசலம் அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
விருத்தாசலம் அருகே ஆலடி கிராமத்தில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே ஆலடி கிராமத்தில் ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இங்கு நீரேற்றுவதற்காக இருந்த மின்மோட்டார் பழுதானதால், கிராம மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் போனது. இதனால் ஆத்திரமடைந்த காலனி பகுதி பொது மக்கள் நேற்று காலி குடங்களுடன் விருத்தாசலம்–பாலக்கொல்லை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது மின்மோட்டாரை பழுது நீக்கி, சீரான குடிநீர் வினியோகம் செய்ய கோரி கோஷங்களை எழுப்பினர். தகவல் அறிந்த ஆலடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.