பழவேற்காடு ஏரியில் தடையை மீறி படகு சவாரி சென்றால் கடும் நடவடிக்கை
பழவேற்காடு ஏரியில் தடையை மீறி படகு சவாரி சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆர்.டி.ஓ. முத்துசாமி எச்சரித்துள்ளார்.
பொன்னேரி,
பொன்னேரி அருகே பழவேற்காடு பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நிழல் கடிகாரம், டச்சுக்கல்லறை, கலங்கரைவிளக்கம், படகுதுறை உள்பட பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் உள்ளது. புத்தாண்டு, பொங்கல், காணும் பொங்கல் போன்ற தினங்களில் சுற்றுலா பயணிகள் பழவேற்காடு கடற்கரையில் குவிந்து இயற்கை அழகை ரசிப்பாளர்கள். தற்போது பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொன்னேரி ஆர்.டி.ஓ. முத்துசாமி தலைமையில் பழவேற்காடு சுற்றுலா விடுதியில் படகோட்டிகளுக்கான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மீன்வளத்துறை உதவி இயக்குனர், வருவாய்துறை அதிகாரிகள் மற்றும் பழவேற்காடு பகுதி படகோட்டிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட படகோட்டிகள், பழவேற்காடு ஏரியில் மீண்டும் பாதுகாப்பான படகு சவாரி செய்ய அனுமதிக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
பின்னர் ஆர்.டி.ஓ. முத்துசாமி பேசும்போது கூறியதாவது:–
பழவேற்காடு ஏரியில் படகு சவாரி செய்ய நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தடையை மிறி புத்தாண்டு, பொங்கல், காணும்பொங்கல் தினங்களில் பழவேற்காடு ஏரியில் படகு சவாரி சென்றால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.